×

இடவசதியின்றி மாணவர்கள் தவிப்பு புதிய கட்டிடம் கட்டப்படுமா?

தொண்டி, ஜன.29:  தொண்டி அருகே நம்புதாளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் போதிய இடவசதி இன்றி மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பள்ளியில் இருந்த கட்டிடம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. மாற்று கட்டிடம் கட்டிதரப்படவில்லை. இதனால் மாணவர்களின் அவதியை போக்க உடனடியாக புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் உள்ள தொடக்கப்பள்ளியில் 400க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகன்றனர். இங்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டிட வசதி கிடையாது. 2 வருடங்களுக்கு முன்பு இப்பள்ளியில் இருந்த ஓட்டு கட்டிடம் பழமையின் காரணமாக இடிக்கப்பட்டது. அதற்கு மாற்றாக புதிய கட்டிடம் எதுவும் இந்நாள் வரை கட்டிதரப்படவில்லை.

போதிய இடவசதி இல்லாததால் மாணவர்கள் வராண்டாவிலும் இடநெருக்கடியிலும் பாடம் படித்து வருகின்றனர். இதுகுறித்து அனைத்து உயர் அதிகாரிகளிடமும் தெரியப்படுத்தியும் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாணவர்களின் நலன் கருதி உடனடியாக புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் செய்யது யூசுப் கூறியது, மாவட்டத்தில் அதிகமான மாணவர்கள் படிக்கும் பள்ளி இதுவாகும். இங்கு போதிய இடவசதி இல்லாமல் மாணவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பது எல்லா அதிகாரிகளுக்கும் தெரியும். இருப்பினும் கட்டிடம் கட்ட அனுமதிக்க மறுக்கின்றனர். அரசு பள்ளியில் அதிக மாணவர்களை சேர்க்க படாதபாடு படவேண்டியுள்ளது. இதுபோன்ற செயல்களால் சேரும் மாணவர்களும் தனியார் பள்ளிக்கு செல்ல தூண்டுவது போல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதுகுறிதது உரிய நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : building ,
× RELATED தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்...