×

மார்த்தாண்டத்தில் துணிகர சம்பவம் நகை கடையில் 2 கிலோ தங்கம் கொள்ளை உரிமையாளர் வீட்டுக்குள் நுழைந்து சாவியை திருடி கைவரிசை

மார்த்தாண்டம், ஜன.29 : மார்த்தாண்டத்தில் நகை கடை உரிமையாளர் வீட்டுக்குள் புகுந்து, பூஜை அறையில் இருந்த சாவியை எடுத்து  வந்து நகை கடையை திறந்து சுமார் 2 கிலோ தங்க நகைகளை திருடி சென்றனர்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் விரிகோடு பகுதியை சேர்ந்தவர் ஆசைதம்பி. இவர் மார்த்தாண்டம் பஸ் நிலையம் அருகில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் பொன் விஜய் (40). இவருக்கு திருமணமாகி விஜயராணி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். பொன் விஜய், மார்த்தாண்டம் பஸ் நிலையம் எதிரில்  நகை கடை நடத்தி வருகிறார். ஆசைதம்பி, பொன் விஜய் உள்பட அனைவரும் கூட்டு குடும்பமாக வசிக்கிறார்கள். நேற்று முன் தினம் இரவு  தனது நகை கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்ற, பொன் விஜய் வழக்கம் போல் கடை சாவியை பூஜை அறையில் வைத்து விட்டு உறங்க சென்றார். சாவியுடன் 56 பவுன் தங்க நகைகளும், ரூ.1 லட்சம் ரொக்கமும் இருந்துள்ளது.
நேற்று காலையில், பொன் விஜய் மனைவி விஜயராணி எழுந்து பார்த்த போது வீட்டின் மாடி கதவு திறந்த நிலையில் இருந்தது. மாடியில் சென்று பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி கணவரிடம் தெரிவித்தார். எனவே வீட்டில் ஏதாவது கொள்ளை போய் இருக்கிறதா? என்பதை பார்த்தனர். அப்போது வீட்டின் பூஜையில் இருந்த 56 பவுன் தங்க நகைகள், ₹1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் அங்கிருந்த நகை கடை சாவியையும் காண வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்து நகை கடைக்கு சென்று பார்த்தனர். அப்போது ஷட்டர் பூட்டு திறந்து கிடந்தது.  நகை கடையில் இருந்த நகைகள் அனைத்தும் திருடப்பட்டு இருந்தன. நகைகள் எதுவும் இல்லாமல், கண்ணாடி அலமாரிகள் சுத்தமாக துடைத்து வைத்தது போல் இருந்தது.

உடனடியாக இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. ராமச்சந்திரன், மார்த்தாண்டம் சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கர், குலசேகரம் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் மற்றும் தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். எஸ்.பி. நாத்தும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.  கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. பொன் விஜய் வீட்டின் மாடி வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர், பூஜை அறையில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு நகை கடை சாவியை எடுத்து சென்று வீட்டில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நகை கடையில் உள்ள நகைகளை சாவகாசமாக அமர்ந்து திருடி சென்றுள்ளார். நகை கடையில் இருந்து மட்டும் சுமார் 200 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கடையில் சிசிடிவி கேமரா உள்ளது. அந்த கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதிகாலை 3 மணியளவில் பனிக்குல்லா அணிந்த மர்ம நபர் ஒருவர் கடைக்குள் நுழையும் காட்சி பதிவாகி உள்ளது. இரு கண்கள் மட்டும் வெளியே தெரியும் நிலையில் உள்ளே நுழைந்து நகைகளை திருடி சாவகாசமாக பையில் வைத்துக்கொண்டு அந்த நபர் தப்பி செல்கிறார். இந்த காட்சிகளின் அடிப்படையில் அந்த நபர் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.   ஏற்கனவே கடந்த மாதம் மார்த்தாண்டம் பம்மம் பகுதியில் உள்ள ஒரு நகை கடையில் 80 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் இதுவரை துப்பு துலங்க வில்லை. இந்த நிலையில் மீண்டும் மார்த்தாண்டத்தில் மேலும் ஒரு நகை கடை மற்றும் கடை உரிமையாளர் வீட்டில் இருந்து சுமார் 256 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளை போன நகைகள் மொத்தம் 2 கிலோ வரை இருக்கும் கூறப்படுகிறது. இது பற்றி விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Tags : bandit shop owner ,jewelery shop ,
× RELATED தமிழ்நாட்டில் பல்வேறு நகைக்கடைகளில்...