×

குமரியில் தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைக்காததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்துவேன் வசந்தகுமார் எம்.பி. பேட்டி

நாகர்கோவில், ஜன.29:  குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைக்காததை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டம் நடத்த உள்ளதாக, வசந்தகுமார் எம்.பி. கூறினார்.
வசந்தகுமார் எம்.பி., நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மிக மோசமாக உள்ளன. இந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கைகள் வைத்துள்ளோம். மக்கள் பிரதிநிதிகள் இணைந்து சாலை மறியல் போராட்டமும் நடத்தினோம். ஜனவரி 15ம் தேதிக்குள் சாலைகளை முழுமையாக சீரமைத்து தருவோம் என்றார். ஆனாலும் இன்னும் எந்த பணியும் செய்யவில்லை. சாலைகள் மோசமாக கிடப்பதால் மக்கள் கடும் துயரத்துக்கு உள்ளாகி உள்ளனர். விபத்துக்களும், உயிர் பலிகளும் அதிகரித்துள்ளன.

சாலை பணிகளை செய்ய டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் கடந்த 3 ஆண்டுகளாக பணிகளை செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனர். எனவே அவர்களை தகுதி நீக்கம் செய்து கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என, எனது தலைமையில் எம்.எல்.ஏ.க்களுடன் சென்று கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறையில் உள்ள அதிகாரிகள்  தங்கள் பணிகளை சரிவர செய்வதில்லை. மக்கள் பிரதிநிதிகள் வைக்கும் கோரிக்கைகளுக்கு அவர்கள் செவி சாய்ப்பதில்லை. எம்.பி. என்ற முறையில் பலமுறை அவர்களிடம் சாலை சீரமைப்பு தொடர்பாக வலியுறுத்தி உள்ளேன். ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். அவர்களால் தான் மக்கள் மத்தியில் எங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. டெல்லியில் உள்ள அதிகாரிகள் வரை புகார் அளித்தும், மத்திய அமைச்சரை சந்தித்தும் எதுவும் நடக்க வில்லை.

நாடாளுமன்றம் விரைவில் கூட இருக்கிறது.  எனவே இன்னும் 10 தினங்களுக்குள் தேசிய நெடுஞ்சாலைகளை முழுமையாக சீரமைக்காவிடில் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பேசுவேன். மேலும் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன் போராட்டம் நடத்துவேன். நாடாளுமன்றத்தையும், மகாத்மா காந்தியையும் நம்புவதை தவிர எனக்கு வேறு வழியில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தரம் தாழ்ந்து பேசி வருகிறார். அவர் படித்தவர் போல பண்பாடான முறையில் பேச வில்லை. எதிர்க்கட்சியினரை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வருகிறார். அவர் சிந்தித்து பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கோட்டாறு ஆயுர்வேத அரசு மருத்துவ கல்லூரியில் தனது சொந்த பணத்தில் இருந்து சுமார் ரூ.1 லட்சம் செலவில்  குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வசந்தகுமார் எம்.பி. அமைத்துக் கொடுத்துள்ளார். நேற்று அதை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயுர்வேத கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டேவி, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் ராஜதுரை, இ.என்.ராஜா, பிரைட், அசோக்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Vasanthakumar MP ,Interview ,
× RELATED மக்களவை தேர்தலில் திமுக சார்பில்...