×

₹8 ஆயிரம் லஞ்சம் கேட்டு விஏஓ மிரட்டும் ஆடியோ சமூக வலை தளங்களில் வைரலாகிறது

மார்த்தாண்டம்,ஜன.29 :  மார்த்தாண்டம் அருகே உள்ள கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் ₹8 ஆயிரம் லஞ்சம் கேட்டு ஒருவரை மிரட்டும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஆடியோ மாவட்டம் முழுவதும் பரவி வருவதால் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   இந்த ஆடியோவில் மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு கிராம நிர்வாக அலுவலரை ஒருவர் தொடர்பு கொள்கிறார். அவரிடம் விஏஓ,  பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாய் பகுதியில் மரங்களை வெட்டி ஆக்ரமிப்பு செய்தது தொடர்பாக வருவாய் ஆய்வாளருக்கு யாரோ கூறியுள்ளார்கள். எனவே இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருப்பதற்கும், இந்த விவகாரத்தில் சாதகமான அறிக்கை தயாரிப்பதற்கும் ₹8 ஆயிரம் சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து வாங்கி தர வேண்டும் என கூறுகிறார்.

மேலும் இது தொடர்பாக தாசில்தாரிடம் பேசி சரி செய்து விட்டேன் எனவும் கூறுகிறார். அதற்கு மறுமுனையில் பேசும் நபர், சம்பந்தப்பட்டவர் மிகவும் ஏழ்மையில் உள்ளார். அவருக்கு உதவி செய்யுங்கள் என்கிறார். அதற்கு விஏஓ அரசு புறம்போக்கு நிலத்தை எடுத்தால் அரசு சும்மா விடுமா. எனவே சம்பந்தப்பட்ட நபரிடம் பேசி  எனக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் கொடுக்க ₹8 ஆயிரம் வாங்குங்கள் என கூறுகிறார். மறுமுனையில் பேசியவர் மீண்டும் சம்பந்தப்பட்டவருக்கு பரிந்து பேசவே, விஏஓ நீயாக கூற வேண்டாம். சம்பந்தப்பட்ட நபரிடம் பேசி விட்டு அதன் பின்னர் என்னிடம் கூறுங்கள் என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இதனால் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லஞ்சம் கேட்கும் சம்பந்தப்பட்ட விஏஓ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : ஏ VAO ,
× RELATED பூதப்பாண்டியில் காவல் நிலைய ஆவணம்...