×

சாலைகளை கடக்கும் போது அவசரம் காட்ட வேண்டாம் மாணவர்களுக்கு போலீஸ் அறிவுரை

நாகர்கோவில், ஜன.29 : நாகர்கோவில் கோட்டாரில் உள்ள குமரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் அருண், சப் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் சாலை விதிகள் தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு விளக்கினர். சாலைகளில் செல்லும் போது கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றியும், சாலை குறியீடுகள் குறித்தும் விளக்கப்பட்டது. மேலும் செயல்முறை விளக்கங்களும் நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  நிகழ்ச்சியில் டிராபிக் இன்ஸ்பெக்டர் அருண் பேசுகையில், பள்ளிக்கு வரும் போதும், பள்ளி முடிந்து செல்லும் போதும் மாணவ, மாணவிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். சாலையை கடக்கும் போது நின்று நிதானமாக கடக்க வேண்டும். இரு பக்கமும் வாகனம் வருகிறதா? என்பதை பார்த்த பின் தான் சாலையை கடக்க வேண்டும். சாலைகளில் நடந்து செல்லும் போது இடது பக்கமாக செல்ல வேண்டும். தாய் அல்லது தந்தையுடன் பைக்கில் வரும் போது, கண்டிப்பாக அவர்களை ஹெல்மெட் அணிய கூறுங்கள். ஹெல்மெட் அணியாமல் இருந்தால், பைக்கில் ஏற மாட்டேன் என கூறுங்கள். பெற்றோரை செல்போன் பேசிக் கொண்டு பைக் ஓட்ட அனுமதிக்காதீர்கள். சாலை விதிகளை நீங்கள் முறையாக கடைபிடிப்பதுடன், மற்றவர்களும் கடைபிடிக்க முன்னுதாரணமாக இருக்க வேண்டும். சாலையில் நடந்து செல்லும் போது விளையாடிக் கொண்டோ, கவனக்குறைவாகவோ செல்ல கூடாது என்றார்.  பள்ளி தாளாளர் சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆசிரியர் டென்சின்ராஜ் நன்றி கூறினார்.

Tags : roads ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள 5...