×

தர்மபுரி நகரில் திருப்பத்தூர் சாலையில் போக்குவரத்து துண்டிப்பு பாலம் அமைக்கும் பணி துவக்கம்

தர்மபுரி, ஜன.29: தர்மபுரி நகரின் திருப்பத்தூர் சாலையின் குறுக்கே  சிறுபாலம் அமைக்கும் பணிக்கு குழி எடுக்கும்பணி தீவிரமாக நடக்கிறது. இதனால் சாலை துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி சனத்குமார நதியின் இணைப்பு நதி கால்வாய் நகரத்தின் வழியாக செல்லுகிறது. இந்த கால்வாய் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கால்வாய் தர்மபுரி- திருப்பத்தூர் சாலை, சந்தைபேட்டை, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, டிஏஎம்எஸ் காலனி, உழவர் சந்தை வழியாக சென்று ராமாக்காள் ஏரியில் இணைகிறது. இந்த கால்வாயில் 50 ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய, ஆடிப்பண்டிகை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் நீராடி வழிபடுவது வழக்கமாக இருந்துள்ளது. தற்போது இந்த கால்வாயில் தண்ணீர் ஓடுவதில்லை. நகரத்தில் உள்ள வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியே வரும் கழிவுநீர் இந்த கால்வாயில் செல்கிறது.

குப்பாண்டித்தெரு, வேல்பாடிப்போ அருகில், டிஏஎம்எஸ் காலனி, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதியில் இந்த கால்வாய் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றி தூர்வார வேண்டும் என்று நகர மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பொதுப்பணித்துறை இதுபற்றி கண்டுகொள்ளவில்லை. ஆக்கிரமிப்பு பிடியில் தான் இக்கால்வாய் தற்போது உள்ளது. இந்நிலையில் தர்மபுரி- திருப்பத்தூர் சாலையின் குறுக்கே (தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் பள்ளியின் அருகே) இந்த கால்வாய் அடைப்பு ஏற்பட்டது.

இதனால் மண் திண்டுகள் உருவாகி, அந்த பகுதியில் குப்பை கொட்ட தொடங்கினர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்வது தடைப்பட்டது. இதனால் மழைக்காலத்தில் சாலையில் மழைநீர் கழிவுநீர் கலந்து ஓடும் நிலை ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இந்த கால்வாய் அடைப்பை சீர் செய்ய வேண்டும் என்று பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கை ஏற்று தேசிய நெடுஞ்சாலைத்துறை, தர்மபுரி-திருப்பத்தூர் சாலை அவ்வையார் அரசு மகளிர் பள்ளி அருகே சாலையின் குறுக்கே அடைப்பை சீர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் பிற்பகல் சாலையின் குறுக்கே, பொக்லைன் மூலம் குழி எடுக்கும்பணி தொடங்கியது.

2வது நாளாக நேற்றும் நடந்தது. இந்த சாலையின் குறுக்கே சிறுபாலம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  இந்த சிறுபாலம் கட்டும்பணி நடப்பதால், தர்மபுரி- திருப்பத்தூர்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மார்க்கத்தில் வரும் வாகனங்கள், அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் வழியாக செல்லுவதற்கு பதிலாக, மதிகோன்பாளையம் மற்றும் சந்தைபேட்டையின் வழியாக செல்ல போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேபோல், தர்மபுரி நகரத்தில் இருந்து வரும் வாகனங்கள் சந்தைபேட்டை, ராமக்காள் ஏரி மதிகோன்பாளையம் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தர்மபுரி நகரின் திருப்பத்தூர் சாலையின் குறுக்கே பொதுப்பணித்துறை கால்வாயின் குறுக்க சிறுபாலம் அமைக்கும் பணிக்கும் பணி நடக்கிறது. இதையொட்டி பொக்லைன் மூலம் குழி எடுக்கும்பணி தீவிரமாக நடக்கிறது. இதனால் சாலை துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறுபாலம் கட்டி முடித்தால், பொதுப்பணித்துறை கால்வாயில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்காமல் கரைபுரண்டு ஓடும். கழிவுநீர் ஆங்காங்கே தேக்கம் ஏற்படாது. இந்த பொதுப்பணித்துறை கால்வாய் ஆக்கிரமிப்பு பிடியில் உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அரசு அதிகாரிகள் அகற்ற முன்வர வேண்டும். இந்த சிறுபாலத்தை விரைவாக கட்டி முடித்து போக்குவரத்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : bridge ,Dharmapuri ,road ,Thiruppathur ,
× RELATED தூத்துக்குடி – திருச்செந்தூர்...