×

மரத்தில் வேன் மோதி 12 பேர் காயம்

பொள்ளாச்சி, ஜன.29:  பொள்ளாச்சி அருகே இன்று அதிகாலை மரத்தில் வேன் மோதிய விபத்தில் 12 பேர் காயமடைந்தனர். டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் கூறினர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள சேத்துமடை அண்ணா நகரை சேர்ந்தவர் சுப்புராஜ் (78) இவர், நேற்று முன்தினம்  மாரடைப்பால் இறந்துவிட்டார். இவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக, தென்காசி மாவட்டம் சங்கரன்கோயிலை சேர்ந்த உறவினர்கள் சுமார் 15 பேர் ஒரு வேனில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். வேனை சங்கரன்கோவிலை சேர்ந்த டிரைவர் மகேஸ் (23) என்பவர் ஓட்டி வந்தார்.

நேற்று அதிகாலை ஆனைமலையை அடுத்த சேத்துமடை கோழிபண்ணை அருகே வரும் போது, திடீரென டிரைவர் மகேஷ் தூங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன், தாறுமாறாக சென்று ரோட்டோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. வேனின் முன்புறம் சேதமடைந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்தவர்கள் சத்தம் போட்டனர். அனைவரும் தூக்க கலக்கத்தில் இருந்ததால், அவர்களால் வேனிலிருந்து விரைவாக வெளியே வர முடியாமல் தவித்தனர்.வேனில் இருந்து பயணிகள் சத்தம் கேட்டதை அறிந்த அப்பகுதியினர், விரைந்து வந்து அதில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில், டிரைவர் மகேஷ் மற்றும்  இருளப்பன் (74), ராஜன் (55), இருளப்பசாமி (64), கருப்பசாமி (54), மற்றொரு கருப்பசாமி (60), குழந்தைசாமி (54), கார்த்திக் (18), முருகையா (47), ஜோசப் (46), காசிராஜன் (32), கிரேஸ் செல்லத்தாய் (60) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆனைமலை போலீசார் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில்  அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : van crashes ,
× RELATED மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே...