×

கோடிக்கணக்கில் அரசு நிதி வீணடிப்பு மாணவிகளின்றி பெயரளவில் மட்டுமே செயல்படும் அரசு மகளிர் ஐடிஐ

புதுச்சேரி, ஜன. 29: புதுச்சேரியில் மாணவிகளின்றி பெயரளவில் மட்டுமே செயல்படும் அரசு மகளிர் ஐடிஐயால் கோடிக்கணக்கில் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது. இதனால் ஆண்கள் ஐடிஐயுடன் இணைக்க கோரி முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 1978ம் ஆண்டு முதல் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையமும் (ஐடிஐ), 1985 முதல் பெண்கள் தொழிற்பயிற்சி நிலையமும் தனித்தனியே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகளின் சேர்க்கை மிகக்குறைவாகி பெயரளவில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. மகளிர் ஐடிஐயில் 7 தொழில்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில் ஒரு தொழிற்கல்வியில் (கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அண்ட் புரோகிராமிங் அசிஸ்டென்ட்) மட்டும் 25 மாணவிகள் படிக்கின்றனர். பிற 2 பிரிவுகளில் 10 மாணவிகளும், 5 பிற தொழில் பிரிவுகளில் மாணவிகளே இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆசிரியர் மற்றும் நிர்வாகப்பிரிவு ஊழியர்கள் என 26 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடியே 55 லட்சத்து 84 ஆயிரம் செலவிடப்பட்டு வருகிறது.

அதேநேரம், ஆண்கள் ஐடிஐயில் அனைத்து தொழில்பயிற்சி பிரிவுகளிலும் 260 மாணவர்களும் படிக்கின்றனர். 32 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டிற்கு 2 கோடியே 92 லட்சத்து 98 ஆயிரத்து 84 ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது. இத்தகவலை ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றுள்ளார். மேலும் இது குறித்து அவர், முதல்வர் நாராயணசாமிக்கு அனுப்பியுள்ள மனுவில், ஆண்கள் ஐடிஐயில் 260 மாணவர்களுக்கு 32 ஊழியர்கள் என இருக்கிறபோது, பெண்கள் ஐடிஐயில் 65 மாணவிகளுக்கு 26 ஊழியர்கள் பணிபுரிவதால் இதன் மூலம் ஆண்டிற்கு கோடிக் கணக்கில் அரசு நிதி வீணடிக்கப்பட்டு வருகிறது. எனவே, பெண்கள் தொழில் பயிற்சி நிலையத்தை ஆண்கள் ஐடிஐயுடன் இணைத்து இருபாலரும் அங்கே தொழில் பயிற்சி பயிலும் வண்ணம் செய்யும்பட்சத்தில் 2 நிர்வாக பிரிவுகளால் அரசுக்கு ஏற்படும் செலவினங்களை தவிர்க்கலாம். மேலும், பிற துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு இந்த கூடுதல் நிர்வாக பிரிவு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படசத்தில் அரசு நிதி வீணாவது தடுக்கப்படும். எனவே, இந்த மனுவினை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Tags : ITI ,women ,millions ,
× RELATED வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ₹1.83 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது