×

வடக்கு மேலூரில் இயங்கும் விஏஓ அலுவலகத்தை நெய்வேலி பகுதிக்கு மாற்ற வேண்டும்

நெய்வேலி, ஜன. 29: நெய்வேலி அடுத்த வடக்குமேலூர் கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு சொந்த கட்டிடம் இல்லாததால், இ-சேவை மைய அலுவலகத்தில் இந்த அலுவலகம் கடந்த மூன்று ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், நெய்வேலி டவுன்ஷிப் நகர் பகுதிகள் வட்டம் 1 முதல் 30 வரை, மாற்று குடியிருப்புகள், சிலோன் குடியிருப்புகள், இந்திரா நகர், வடக்கு மேலூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன், என்எல்சிக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வாடகை கட்டணம் செலுத்த முடியாத பிரச்னையால் வடக்கு மேலூர் கிராமத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு மக்கள் செல்ல வேண்டுமென்றால் கும்பகோணம்-சென்னை சாலையில் உள்ள வடக்குத்து பஸ் நிறுத்தம் இறங்கி, ஐந்து  கிலோ மீட்டர் தூரம் நடந்து தான் செல்ல வேண்டும்.
இல்லையெனில் நெய்வேலி டவுன்ஷிப் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 6  கிலோ மீட்டர் தூரம் நடந்துதான் செல்ல வேண்டும்,
இங்கு செல்ல கார், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் மட்டுமே செல்ல முடியும். மற்ற ஏழை எளிய பொதுமக்கள் நிலை
பரிதாபத்திற்குரியது.

இதனால் நெய்வேலி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வயதானவர்கள் என அனைவரும் மிகவும் அவதிப்படும் நிலை உள்ளது. நெய்வேலி டவுன்ஷிப் நகரில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானவர்களுக்கு கிராம நிர்வாக அலுவலகம் இருக்கும் இடம் தெரியாத நிலை உள்ளது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று பல்வேறு பணிகள் கிராம சேவை மையத்தில் இயங்குவதால், ஊராட்சியில் உள்ள பணிகள் பாதிப்பதாக அப்பகுதி பொதுமக்கள்
குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, வடக்கு மேலூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை, அனைத்து தரப்பினரும் வந்து செல்லும் வகையில் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : VAO ,office ,North Melur ,Neyveli ,
× RELATED பாஜவினர் மீது போலீசில் புகார்