×

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளர்கள் தங்கும் கட்டிடத்தை திறக்க வலியுறுத்தல்

சிதம்பரம், ஜன. 29: சிதம்பரம் அரசு மருத்துவமனை பல ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. சுற்று வட்டாரங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு இந்த மருத்துவமனைதான் வரப்பிரசாதம். 4 தாலுகாக்கள் மட்டுமல்லாது நாகை மாவட்டம் சீர்காழி போன்ற பகுதிகளிலிருந்தும் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு தினமும் வந்து உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுபவர்கள் அதிகம் இந்நிலையில், உள் நோயாளிகளின் உதவியாளர்கள் தங்குவதற்கு போதிய வசதிகள் இல்லை என கூறி அதற்காக ஒரு கட்டிடம் கட்டித்தர வேண்டும் என தொடர்ந்து நோயாளிகள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து சிதம்பரம் நகராட்சி சார்பில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார நிதி திட்டம் 2016-17ம் ஆண்டு திட்ட நிதியிலிருந்து கட்டிடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுபவர்களின் உதவியாளர்கள் இந்த கட்டிடத்தில் தங்கியிருக்கும் வகையில் அதற்குண்டான வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டிடம், பல மாதங்களாகவே திறக்கப்படாமல் உள்ளது.இதனால் இந்த கட்டிடம் பாழடைந்து வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நோயாளிகளின் உதவியாளர்கள் தங்கும் கட்டிடம் திறக்கப்படாததால் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக உள்ளவர்களின் உதவியாளர்கள் மருத்துவமனைக்கு வெளியே  மரத்தடியிலும், வெயிலிலும்  காத்திருக்கும் அவல நிலை உருவாகி உள்ளது. எனவே, அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : opening ,Patients 'Assistants' Lodge ,Chidambaram Government Hospital ,
× RELATED கொடைக்கானலில் இசேவை மையம் திறப்பு