×

குறைதீர் நாள் கூட்டத்தில் மனுக்களுடன் குவிந்த மக்கள் தென்காசி வள்ளிநகரில் அடிப்படை வசதியின்றி அவதிப்படும் பெண்கள்

தென்காசி, ஜன. 28: தென்காசியில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, சப்.கலெக்டர் மரகதநாதன், ஆர்.டி.ஓ.பழனிக்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருவாய்துறை அதிகாரிகள், தாசில்தார்கள், நகராட்சி, பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள், யூனியன் அதிகாரிகள், கல்வித்துறை,  வனத்துறை, காவல்துறை, வேளாண்மைதுறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.  கூட்டத்தில் வனவேங்கைகள் கட்சியின் மாநில பொது செயலாளர் உலகநாதன், மாவட்ட செயலாளர் கருப்பசாமி, மாநில செயற்குழு மாரியப்பன், வெங்கடேஷ்குமார் ஆகியோர் அளித்துள்ள மனுவில், தென்காசி வள்ளிநகர் பகுதியில் குறவன் பழங்குடி மக்கள் சுமார் ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். பெண்கள் கழிப்பிடம், சாலைவசதி மற்றும் வாறுகால் வசதிகள் இல்லை. இதனால் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். வாறுகால் வசதி இல்லாததால் வீட்டின் முன்பு கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். வனவேங்கைகள் கட்சி இளைஞர் அணி மாநில துணைச்செயலாளர் குமார் அளித்துள்ள மனுவில், கடையநல்லூரில் குறவர் பழங்குடி மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சுடுகாடு தற்போது சில தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த ஆக்கிரமிப்பை அகற்றி எரியூட்டும் மையம் அமைத்து தர வேண்டுமென மனு அளித்துள்ளனர்.

 தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அதன் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் அளித்துள்ள மனுவில், நெடுவயல் வீரவெண்பாமாலை கால் பாசன கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விளை பொருட்களை வெளியே கொண்டு வர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வண்டிப்பாதை அமைத்து தர வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர். பா.ஜ. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் அளித்துள்ள மனுவில், தென்காசி நகராட்சி மலையான்தெரு மற்றும் மங்கம்மா சாலை பகுதிகளில் சாலையோரம் மற்றும் நீர்வழி பகுதிகளில் அனுமதியில்லாமல் வீடு கட்டி குடியிருக்கும் பொதுமக்களை கணக்கீடு செய்து அவர்களுக்கு பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தென்காசி நகராட்சி கீழப்புலியூர் பகுதியில் அமையவுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கி தர வேண்டுமென கூறியுள்ளார். தென்காசி நகராட்சி 9வது வார்டு ஷேக்அப்துல்லா மற்றும் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், ஆபாத் பள்ளிவாசல் தெருவில் ஆயிரத்து 500 பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.தற்போது தார் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. எனவே இச்சாலையில் உள்ள ஆக்ரமிப்புகள் மற்றும் காய்ந்த மரங்களை அற்றி விட்டு தார் சாலை அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : petitions ,meeting ,facilities ,Tenkasi Vallinagar ,
× RELATED குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 221 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை