×

வி.சாலையில் கிராம சபை கூட்டம்

விக்கிரவாண்டி, ஜன. 28: விக்கிரவாண்டி ஒன்றியம் வி.சாலை கிராமத்தில் குடியரசு தினவிழா சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. விக்கிரவாண்டி ஒன்றியம் வி.சாலை கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். ஆர்டிஓ ராஜேந்திரன், திட்ட இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிடிஓ நாராயணன் வரவேற்றார். கூட்டத்தில் ஆட்சியர் அண்ணாதுரை பேசியதாவது:
இக்கிராமத்தில் அடிப்படை வசதிகளை கொண்டு வர தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி தர உள்ளது. கிராம சுகாதாரம் பின்பற்றிட வேண்டுகிறேன், சுகாதாரத்தை கடைபிடிக்கும் வகையில் தனி நபர் கழிவறை பயன்படுத்திட வேண்டும், தொற்றுநோய் பரவாமல் இருக்க ஏரிக்கரைகளில் இறந்த நாய், கால்நடைகள் போன்றவற்றை அப்படியே போடக்கூடாது. தனி இடங்களில் புதைக்க வேண்டும். ஏரி பகுதியில் போடுவதால் அவைகள் அழுகி, அதிலிருந்து கிருமிகள் உருவாகி தண்ணீர் மாசுபட்டு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. மழைநீர் சேகரிப்புகளை ஏற்படுத்த வேண்டும். சுகாதார துறையின் மூலம் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிராம மக்கள் அனைவரும் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.  திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்திட கிராம மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நியாய விலை கடைகளில் ஏதேனும் புகார்கள் இருந்தால் அதுகுறித்து என்னிடம் புகார் தெரிவித்தால் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார். தாசில்தார் பார்த்தீபன், மண்டல துணை தாசில்தார் முருகதாஸ், வருவாய் ஆய்வாளர் விஜயன், வட்டார மருத்துவ அலுவலர் வினோத், கால்நடைத்துறை உதவி இயக்குனர் மோகன், டாக்டர் பிரபாகரமூர்த்தி, மகளிர் உதவி திட்ட அலுவலர் சத்தியமூர்த்தி, தனி தாசில்தார் வெங்கட சுப்பிரமணியன், வேளாண்மை துறை உதவி இயக்குனர் மாதவன், துணை பிடிஓ பாலசுப்பிரமணியன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், இமயவரம்பன், சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் அலமேலு உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பிடிஓ சுமதி நன்றி கூறினார்.

Tags : Village Council Meeting ,
× RELATED கொட்டாம்பட்டி பகுதியில் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம்