×

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்

சிதம்பரம், ஜன. 28:  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவரும், மொழிப் போராட்ட தியாகியுமான ராஜேந்திரனின் சிலை சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலைநகரில் உள்ளது. இவர் உயிர் நீத்த நாள் நேற்றைய தினம் ஆகும். இதையடுத்து தமிழ்ப் பேரரசு கட்சியின் தலைவரும், பிரபல திரைப்பட இயக்குனருமான கவுதமன் நேற்று சிதம்பரம் வந்தார். பின்னர் தனது கட்சி நிர்வாகிகளுடன் அண்ணாமலைநகருக்கு சென்று அங்குள்ள ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஆளும் அதிகார வர்க்கம் தமிழ் மொழியை அழிக்க காரணமாக இருக்கிறது. அரசு பள்ளியில் தமிழ் வழிக் கல்வி இல்லை. இதற்கு இந்திய அரசுதான் காரணம். தமிழக அரசும் இந்த மொழியை அழிப்பதற்கு துணை போகிறது. தஞ்சை கோயிலில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும். சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ளிட்ட தமிழ் மன்னர்கள் கட்டிய அனைத்து கோயில்களிலும் தமிழிலேயே அர்ச்சனை நடத்த வேண்டும். எங்கள் இனம், மொழி அழிக்கப்பட்டால் இன்னும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராக இருக்கிறோம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தமிழரின் கல்வி மறுக்கப்படுகிறது. வேலை மறுக்கப்படுகிறது. இந்த தேர்வுகளில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பச்சை மோசடியை அதிகார வர்க்கம் செய்துள்ளது. இந்த மோசடியில் அரசு அதிகாரிகள் மட்டுமல்லாது, அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் போன்றோர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இப்படிப்பட்ட மிகப்பெரிய மோசடி தேர்வு நடந்து உள்ள வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நேர்மையற்ற போக்கு இனியும் தொடரக்கூடாது என என கூறினார். இதில் மறுமலர்ச்சி வன்னியர் சங்கத்தின் நிறுவனர் மணிவண்ணன், தமிழ்ப் பேரரசு கட்சியின் மாநில துணை பொதுசெயலாளர் ரகுநாதன், இணை கொள்கை பரப்பு செயலாளர் துரைகுமார், கடலூர் மாவட்ட செயலாளர் புகழேந்தி, சிதம்பரம் நகர செயலாளர் சபாபதி, மாணவரணி செயலாளர் வீரமணி மற்றும் நிர்வாகிகள் பழனிவேல், சரவணன், ஐயப்பன், அருள்செல்வம், முருகன், சிவக்குமார், பிரவீன்ராஜ் கமலகான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : CBI ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...