×

நாகை அருகே கிராம செவிலியரை மானபங்கம் செய்ய முயன்றவரை கைது செய்யக்கோரி இன்று ஆர்ப்பாட்டம்

நாகை, ஜன.27: நாகை அருகே கிராம செவிலியரை மானபங்கம் செய்ய முயன்ற நபரை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்  இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நாகை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் இளவரசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அன்பழகன் நடந்துள்ள வேலைகள் குறித்து பேசினார். நாகை மாவட்டம் வடவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணி புரியும் பெண் ஊழியர் கடந்த 22ம் தேதி தன்னுடைய வழக்கமான தடுப்பூசி பணியை முடித்துவிட்டு, கணக்கை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைக்க இரண்டு சக்கர வாகனத்தில் சென்றபோது வடவூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மிக அருகாமையில் 32 வயது வாலிபர் மானபங்கம் செய்ய முயன்றார். இது தொடர்பாக வேளாங்கண்ணி போலீஸ் ஸ்டேசனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த நபரை உடனடியாக கைது செய்து போக்சோ சட்டம், மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட தகுந்த பிரிவுகளில் கீழ் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அலுவலகங்களில் மட்டுமல்லாமல் களப் பணிகளில் பணிபுரியும் காவல்துறை, பொது சுகாதாரத் துறை, சத்துணவு, ஊட்டச்சத்து உள்ளிட்டு அனைத்து பகுதிகளிலும் பணிபுரியும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் இன்று(27ம் தேதி) மதியம் 1.30 மணிக்கு நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட மகளிர் துணைக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. அதே நாள் மாலை நாகை மாவட்டத்தில் அனைத்து வட்ட மையங்களிலும் மாலை நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. இரண்டாம் கட்டமாக தமிழகம் முழுவதும் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட துணைத் தலைவர்கள் ராணி, ராஜு ,மாவட்ட இணைச் செயலாளர்கள் கலா, ஜம்ருத் நிஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் வாசுகி நன்றி கூறினார்.


Tags : Protests ,village nurse ,arrest ,
× RELATED வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. கைது!!