×

போதிய கட்டிடங்கள் இல்லை இடநெருக்கடியில் இஎஸ்ஐ மருத்துவமனை நோயாளிகள் அவதி

தேனி, ஜன.28: தேனியில் உள்ள தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ மருத்துவமனையில் நோயாளிகள் வந்து செல்லும் அளவிற்கு கட்டிடம் இல்லாததால் நோயாளிகள் அவதியுறும் நிலை உள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் உடல்நலனை பேணிக்காக்க தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. இதில் எந்த நிறுவனத்தில் தொழிலாளர் பணிபுரிகிறாரோ அந்ந நிறுவனமானது தொழிலாளியின் மாதச் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டுக்கு செலுத்துகிறது. இத்தகைய காப்பீடு பிரிமியம் செலுத்தும் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவமனைகள் மூலமாக சிகிச்சை தேவைப்படும்போது சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

மதுரை மண்டலத்திற்குட்பட்ட தேனி மாவட்டத்தில் தேனி மற்றும் ஆண்டிபட்டி ஆகிய இரு இடங்களில் தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு மருந்தகங்கள் செயல்படுகின்றன. இதில் தேனியில் உள்ள மருந்தகமானது தேனி பழைய அரசினர் மருத்துவமனை செல்லும் சாலையில் தனியார் கட்டிடத்தில் கடந்த 1984ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இம்மருந்தகத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் தங்களுக்கான சிகிச்சைக்கு பதிவு செய்துள்ளனர். இம்மருந்தகத்தில் காலையும், மாலையும் இருவேளைகளில் தொழிலாளர்களுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது. இதற்காக 2 எம்.பி.பி.எஸ் டாக்டர்கள், 2 பார்மசிஸ்டுகள், 2 உதவியாளர்கள், 2 மருத்துவபணியாளர்கள் பணிநியமிக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும்  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 100 முதல் 150 நோயாளிகள் வரை வந்து சிகிச்சை பெற்றும் மருந்துகள் வாங்கியும் சென்று வருகின்றனர்.

மருத்துவமனையில் பதிவு செய்த தொழிலாளர்களின் பதிவு நோட்டுக்களை வைக்கவே இருக்கிற கட்டிடம் முழுமையாகி விடுகிறது. இதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் வந்து டாக்டரை காத்திருந்து பார்க்க கட்டிடத்தில் போதிய இடவசதியில்லை. இதனால் தொழிலாளர்கள் குடும்பத்தினர் சிகிச்சைக்கு வந்தால் உள்ளே அமர இடவசதியில்லாமல் மருத்துவமனைக்கு வெளியே சாலையோரங்களில் காத்திருக்க வேண்டிய அவலம் உள்ளது.  20 ஆயிரம் தொழிலாளர்களை பதிவு செய்துள்ள இந்த மருந்தகத்திற்கென அரசு புதிய இடம் ஒதுக்கி படுக்கை வசதிகளுடன் உள்நோயாளிகளாக தங்க ஏற்பாடு செய்தால் சிறிய நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை பார்ப்பதுமட்டுமின்றி உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சையினை தேனியிலேயே பார்த்துக் கொள்ள வசதியாக இருக்கும். எனவே தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ மருத்துவமனைக்கு புதிய இடம் ஒதுக்கி, புதியகட்டிடம் கட்டிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Tags : buildings ,
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...