×

சுற்றுச்சுவர் இல்லாததால் அரசு விடுதிகளில் குடிமகன்கள் கும்மாளம் மாணவர்கள் திண்டாட்டம்

காரைக்குடி, ஜன.28: காரைக்குடி பகுதியில் பல கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் வெளி நபர்கள் கும்மாளம் போடுவதோடு, கையில் கிடைக்கும் பொருட்களை திருடி செல்வதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். காரைக்குடி பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பெரும்பான்மையான மாணவர்கள் அரசு விடுதிகள் தங்கி படித்து வருகின்றனர். ஆதி திராவிட கல்லூரி மாணவர்களுக்கு என 5 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்களுக்கு ஒன்றும், மாணவியர்களுக்கு ஒன்று என 2 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகள் அனைத்தும் சொந்த கட்டிங்களில் உள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 3 விடுதிகள் உள்ளன.

இதில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி 1, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதி 1 மற்றும் டி.என்.சி, சிறுபான்மை நல மாணவர் விடுதி ஒன்று. இவை அனைத்தும் வாடகை கட்டிடத்தில் இயங்கிவருகிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி 2 உள்ளது. இதில் கழனிவாசல் சந்தைக்கு எதிரே உள்ளது மட்டும் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ஒரு கட்டிடம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட பள்ளி, மாணவர்களுக்கு விடுதிகளே கிடையாது.

இந்நிலையில் என்ஜிஜிஓ காலனி சாலை பகுதியில் பல கோடியில் மாணவ, மாணவிகள் விடுதிகள் கட்டப்பட்டு பல்வேறு பகுதி மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் மாணவியர் விடுதிக்கு முறையாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்கள் விடுதிக்கு சுற்றுச்சுவர் கிடையாது. இதனால் இரவு நேரங்களில் குடிமகன்கள் விடுதி வாசலில் அமர்ந்து கும்மாளம் போடுவதும், தகாத வார்த்தைகளில் பேசுவது அதிகரித்து வருகிறது. தவிர சில நேரங்களில் வெளியே கிடக்கும் பொருட்களை திருடி செல்லும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது என மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags : hostels ,citizens ,
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...