×

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்


ராமநாதபுரம், ஜன.28:  ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடமிருந்து கலெக்டர் கோரிக்கை மனுக்கள் பெற்று, அம்மனுக்களை ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து கலெக்டர் வீரராகவராவ், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் ராமநாதபுரம் ஒன்றியத்தை சார்ந்த 8 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேவையான அலிம்கோ உதவி உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து, வருவாய்த் துறையின் சார்பாக இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மணி, கருப்பையா மற்றும் கடலாடி வட்டம் கீழக்கிடாரம் பகுதியைச் சேர்ந்த அகமது இப்ராஹிம் முதியோர் உதவித் தொகைக்கான ஆணையினையும் வழங்கினார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை வழங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு அமர்விடம் ஏற்படுத்தப்பட்டு, அவர்களிடத்தில் கலெக்டர் நேரடியாகச் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றார். தொடர்ந்து இக்கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோபு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, உதவித் திட்ட அலுவலர் சுரேஷ்குமார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,public ,Public Debate Meeting ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...