×

சேதமடைந்த தொட்டிகளால் வீணாகும் பல லட்சம் லிட்டர் குடிநீர் தண்ணீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு

சாயல்குடி, ஜன.28: கடலாடியில் காவிரி கூட்டுகுடிநீர் குழாய் ஏர்வால்வு தொட்டிகள் சேதமடைந்து உள்ளதால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. குளம் போல் தேங்கி சுகாதாரக்கேடு நிலவுவதாக கிராமமக்கள் புகார் கூறுகின்றனர்.
காவிரி, ராமநாதபுரம் கூட்டுகுடிநீர் திட்டம் கடந்த 2009ம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டது. திருச்சி கொள்ளிடம் ஆற்றில் ராட்சத கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. திருச்சியிலிருந்து சிவகங்கை, பரமக்குடி, முதுகுளத்தூர் வழியாக கடலாடி, சாயல்குடி பகுதிகளுக்கும், சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் கடுகுசந்தை, கீழச்செல்வனூர், சிக்கல் பகுதிக்கும் ராட்சத சிமென்ட் பூசப்பட்ட இரும்பு குழாய் மூலம் தண்ணீர் செல்கிறது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக சாலையோரம் தோண்டப்படும் குழிகள், தண்ணீர் திருட்டுக்காக சேதப்படுத்துதல் போன்ற காரணங்களால் பல இடங்களில் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் ஆங்காங்கே கசிந்து வீணாகி வருகிறது.

மேலும் குழாய் ஏர்வால்வு தொட்டிகள் அனைத்தும் மூடாமல் திறந்து கிடக்கிறது. இதில் பொதுமக்கள் தண்ணீர் அள்ளி வந்தாலும் கூட, சிலர் தொட்டிக்குள் சோப்பு போட்டு குளித்தல், துணிகளை துவைத்தல், டிராக்டர் டேங்கர்களில் தண்ணீர் எடுத்தல் போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரும்பான்மையான தொட்டிகள் சேதமடைந்து கிடக்கிறது. இந்நிலையில் கடலாடி தேவர்நகர் பஸ் நிறுத்தம் அருகிலுள்ள தொட்டிகளிலிருந்து வழிந்தோடி பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் மற்ற கிராமங்களுக்கு தண்ணீர் போய் சேராததால், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, சேதுநகர், தேவர்நகர், வி.எம்.வி நகரில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் காவிரி கூட்டுகுடிநீர் குழாய் ஏர்வால்வு தொட்டி உடைந்து ஒருமாதமாக தண்ணீர் வழிந்தோடி வீணாகி வருகிறது. காலி இடங்களில் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி, சுகாதாரக்கேடு நிலவுகிறது. பகல்,இரவு நேரங்களில் கொசுக்கடியால் அவதிப்படுகிறோம். குழந்தை முதல் முதியோர்க்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொற்றுநோய்கள் ஏற்பட்டு வருகிறது. குழாய் உடைப்பு குறித்து காவிரி குடிநீர்வடிகால் வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். எனவே சேதப்படுத்தப்பட்டுள்ள குழாய், ஏர்வால்வு தொட்டிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : millions ,
× RELATED பல்லடம் அருகே முட்டை ஏற்றிச்சென்ற...