×

ஏர்வாடியில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

கீழக்கரை, ஜன.28:  கீழக்கரை அருகே தில்லையேந்தல், மாயாகுளம், ஏர்வாடி உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் முதல் கிராமசபை கூட்டம் நடைபெற்றது, இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தில்லையேந்தல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், துணை தலைவர் மஹ்சூக்பானு, ஒன்றிய கவுன்சிலர் கருத்தமுத்து ஆகியோர் முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலர் மங்களசாமி வரவேற்றார். இதில் அனைத்து கிராமங்களிலும் தண்ணீர் வசதி செய்து கொடுப்பது, சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். மாயாகுளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி பாக்கிநாதன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. மண்டல துணை வட்டார அலுவலர் நரசிம்மன், திருப்புல்லாணி ஒன்றிய அதிமுக துணை செயலாளர் பாக்கியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் உதயகுமார் வரவேற்றார்.

இதில் மாயாகுளம் ஊராட்சிக்குட்பட்ட நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு அதில் மரச்செடிகளை நட்டு சுற்றுப்புற சூழ்நிலைகளை பாதுகாப்பது, பழுதடைந்துள்ள அனைத்து மின் கம்பங்களையும் மின்வாரிய உதவியுடன் மாற்றி விட்டு தடையில்லா மின்சாரம் மற்றும் தெருவிளக்கு வசதி செய்து கொடுக்கவேண்டும் என்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. துணைதலைவர் உடையார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜமால் முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர், ஊராட்சி செயலர் அஜ்மல்கான் வரவேற்றார். இதில் ஏர்வாடி மற்றும் ஏர்வாடி தர்ஹாவில் உள்ள இரண்டு மதுக்கடைகளையும் ஒழிப்பது, புதிதாக கட்டப்பட்டு பல ஆண்டுகளாக மக்களின் பயன்பாட்டிற்கு வராமல் உள்ள புதிய பஸ் ஸ்டாணடை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், இடிந்து விழும் நிலையில் உள்ள மூன்று ரேசன் கடைகளையும், மூன்று அரசு ஊராட்சி பள்ளிகளையும் இடித்து விட்டு புதிதாக கட்டி கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

Tags : village council ,Airwadi ,task force ,
× RELATED ஏர்வாடி அருகே காரில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்