×

பழநி, கொடைக்கானல், வேடசந்தூரில் சாலை பாதுகாப்பு வார விழா

வேடசந்தூர், ஜன. 28: சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வேடசந்தூர் ஆத்துமேட்டில் போக்குவரத்து விதிமுறை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலகம், போக்குவரத்து கழகம், காவல்நிலையம் சார்பில் நடத்திய இந்நிகழ்ச்சிக்கு வேடசந்தூர் நுகர்வோர் அமைப்பின் கௌரவ தலைவர் சௌந்தராஜான் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் வாகனஓட்டிகள், பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு குறித்தும், போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்கப்பட்டன. மேலும் தலைகவசம் அணிந்து டூவிலர் ஓட்டி வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தும், தலைகவசம் அணியாமல் வந்த டூவீலர் ஓட்டுனர்களுக்கு, ரோஜா பூ கொடுத்து தலைக்கவசம் அணியும்படி அறிவுறுத்தப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர்கள் மணிவண்ணன், கவிதா, அரசு போக்குவரத்து கழக மேலாளர் மணிகண்டன், சார்பு ஆய்வாளர் ஞானசேகரன், நுகர்வோர் சங்க தலைவர் சந்திரசேகர், செயலாளர் நேருமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

*பழநியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன் தலைமை வகித்தார். டிஎஸ்பி விவேகானந்தன் முன்னிலை வகித்தார். சப்கலெக்டர் உமா கொடியசைத்து துவக்கி வைத்தார். வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளி வாகனங்கள், வாகன பதிவிற்கு வந்த வாகனங்கள், போலீசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வாகனங்கள் பேரணியாக சென்றன. ஹெல்மெட் அணிவதன் அவசியம், சீட் பெல்ட் அணிவதன் அவசியம், சாலை விதிகளை மதிக்க வேண்டியதன் அவசியம், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ் பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்பட்டன. ஏற்பாடுகளை மோட்டார் வாகன ஆய்வாளர் ஈஸ்வரன், செல்வி உள்ளிட்டோர் செய்திருந்தனர். *கொடைக்கானலில் தீயணைப்புத்துறை சார்பில் நடந்த சாலை பாதுகாப்பு வார விழாவிற்கு நிலைய அலுவலர் அன்பழகன் தலைமை வகித்தார். பஸ்நிலையத்தில் நடந்த இவ்விழாவில் விபத்து காலங்களில் செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சை முறைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இதில் டாக்ஸி ஓட்டுனர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Palani ,Kodaikanal ,Vedasandur ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்