×

புத்தாநத்தம் சுற்று பகுதிகளில் புதிதாக டாஸ்மாக்கடை திறக்க அனுமதிக்ககூடாது

மணப்பாறை, ஜன.28: மணப்பாறை அருகேயுள்ள புத்தாநத்தம் பகுதியை சுற்றியுள்ள குக்கிராமங்களில் புதிதாக டாஸ்மாக் கடை வைக்க அரசு அனுமதி வழங்கக் கூடாது என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகேயுள்ள சின்னாகவுண்டம்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் கடை திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் திறந்த கொஞ்ச நேரத்தில் உடனடியாக டாஸ்மாக்கடை மூடப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குடியரசு தினவிழாவினை முன்னிட்டு நேற்றுமுன்தினம் புத்தாநத்தம் அருகேயுள்ள கருஞ்சோலைபட்டியில் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் அமுதா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் நேதாஜி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சுற்றுப்புற கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், புத்தாநத்தத்தை அடுத்த சின்னாகவுண்டம்பட்டியில் அரசு மதுபான கடை வைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்யவும், புத்தாநத்தத்தை சுற்றியுள்ள குக்கிராமங்களில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க அனுமதி வழங்கக்கூடாது என அரசை வலியுறுத்தியும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tags : opening ,roundabout ,Tasmakada ,
× RELATED பொன்னேரியில் ஜமாபந்தி துவக்கம்: 13ம் தேதிவரை நடைபெறும்