×

தாய், தந்தை, ஆசிரியர்களை ஹீரோவாக நினையுங்கள்

திருச்சி, ஜன.28: பள்ளி மாணவ, மாணவிகள் சினிமா நடிகர்களை ஹீரோவாக எண்ணாமல் தாய், தந்தையர், ஆசிரிய, ஆசிரியைகளை ஹீரோவாக நினையுங்கள் என்று பூனாம்பாளையம் அரசு பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவில் சிலம்பத்தில் சாதனை படைத்த சுகித்தாமோகன் பேசினார். மணச்சநல்லூர் பூனாம்பாளயத்தில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில் 71 வது குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவில் உஷாராணி உதவி தலைமை ஆசிரியர் வரவேற்புரை ஆற்றினார். பூனாம்பாளயம் ஊராட்சி மன்ற தலைவர் ஹரிகிருஷ்ணன், துணை தலைவர் தனலட்சுமி ரெங்கசாமி, மாவட்ட கவுன்சிலர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் தேசியகொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார். விழாவில் சிலம்பத்தில் பல்வேறு சாதனைகள் படைத்த சுகித்தாமோகன் பேசும்போது, திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் எழுதிய பெரிதினும் பெரிது கேள் எனும் புத்தகத்தை பள்ளிக்கும், மற்றும் ஊர் நூலகத்திற்கு பரிசளித்து அரசு பள்ளியில் படித்து இன்று காவல்துறையில் பணியாற்றும் செந்தில்குமார், எனது ஹீரோ. அதுபோல பள்ளி மாணவர்களாகிய நீங்களும் நடிகர் நடிகைகளை ஹீரோ ஹீரோயினாக கருதாமல் உங்கள் தந்தை, தாய் மற்றும் ஆசிரியர் ஆகியோரை ஹீரோவாக நினையுங்கள் என உரையாற்றினார். விழாவில் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜமாணிக்கம், பள்ளி விளையாட்டு ஆசிரியர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிலம்ப மாணவி சுகித்தா விதை பந்துகள் மற்றும் மர செடிகளை நட்டு வைத்தார். பள்ளி ஆசிரியர் ரேவதி நன்றி கூறினார்.

Tags : Teacher ,
× RELATED கல்லூரி மாணவர்களின் வாக்காளர்...