×

மத்திய பல்கலைக்கழக குடியரசு தினவிழாவில் காஷ்மீர் மாநில மாணவர்கள் பங்கேற்றது இந்தியாவின் ஒற்றுமையை விளக்குகிறது

திருவாரூர், ஜன. 28: திருவாரூரில் இயங்கிவரும் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் காஷ்மீர் மாநில மாணவர்கள் கலந்து கொண்டது இந்தியாவின் ஒற்றுமையை விளக்குவதாக துணைவேந்தர் தாஸ் தெரிவித்துள்ளார். திருவாரூர் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை கட்டுப்பாட்டில் இயங்கிவரும் இந்த மத்திய பல்கலைகழகத்தில் தமிழகம் மட்டுமன்றி கேரளா, ஆந்திரா,கர்நாடகம், பீகார், ஒரிசா, மேற்கு வங்கம்,ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1750 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பல்கலைக்கழகத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற குடியரசு தின விழாவில் லடாக் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மத்திய பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட நிலையில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து துணைவேந்தர் தாஸ் பேசியதாவது, இந்தியா ஒரு புவியியல் மட்டுமல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த நாடு கருத்துக்கள், தத்துவம், தொழில்முறை மற்றும் அறிவியல்,வரலாறு,கைவினை, புதுமை மற்றும் அனுபவம் ,கல்வி போன்றவற்றில் ஓன்றுடன் ஓன்று பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது. அந்த வகையில் குடியரசு தின விழாவில் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டது மிகவும் பெருமை வாய்ந்ததாகும். ஜம்மு காஷ்மீர் பிராந்தியமானது தமிழகத்துடன் கலாச்சார பரிமாற்றத்திற்கான பல முயற்சிகளுக்காவும், அனைவரையும் உள்ளடக்கிய புவியியல் கலாச்சாரம் மற்றும் மொழி தடைகளை உடைப்பதற்காகவும் இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வதுடன் இந்த மாணவர்கள் தமிழ் கலாச்சாரத்தை கற்று கொள்வதற்காக நமது (திருவாரூர்) பல்கலைகழக மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளது மிக பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி இந்தியாவின் ஓற்றுமையை வெளிபடுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. இவ்வாறு துணைவேந்தர் தாஸ் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் பதிவாளர் புவனேஸ்வரி, தேர்வு கட்டுப்பாட்டாளர் ரகுபதி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : Kashmir ,Central University Republic Day ,India ,
× RELATED காஷ்மீரில் கடும் எதிர்ப்பால் பொது...