×

3 ஆண்டிலிருந்து 25 ஆண்டு வரை மகசூல் தரக்கூடிய எண்ணைப்பனை சாகுபடி செய்து பயன்பெறலாம்

வலங்கைமான்,ஜன.28: மூன்று ஆண்டிலிருந்து இருபத்தைந்து ஆண்டுவரை மகசூல் தரக்கூடிய எண்ணைய் பனை சாகுபடி செய்ய வலங்கைமான் வட்டார விவசாயிகளை வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்ரமணியன் அழைப்பு விடுத்துள்ளார். பாமாயில் மரம் என்று அழைக்கப்படும் எண்ணை பனை என்பது பனை மர குடும்பத்தை சார்ந்தது. எண்ணை பனை ஆண்டிற்கு ஒரு ஹெக்டேரில் 4 முதல் 6 டன்கள் வரை எண்ணை கொடுக்கக்கூடிய ஒரு மரப்பயிராகும்.
இது மற்ற எண்ணைய் வித்துபயிர்களுடன் ஒப்பிடுகையில் பல மடங்கு அதிக எண்ணை மகசூல் தரவல்லது. இந்த மரம் நட்ட 3ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 25 ஆண்டுகள் வரை மகசூல் தரக்கூடியது.உவர் நிலத்திற்கு ஏற்றது. குறைவான சாகுபடி செலவு. பழக்குலை உற்பத்தி செலவினமும் மிகவும் குறைவு. வேலை ஆட்கள் மிகவும் குறைவு. ஆகவே சிறு விவசாயிகள் 5 ஏக்கர் வரை வெளி ஆட்கள் உதவியின்றி தாங்களே முழுமையாக பராமரிக்கலாம். மழை, வெள்ளம் மற்றம் களவு சேதம் கிடையாது. பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைவு. தண்ணீர் வசதி மற்றும் உர நிர்வாகத்திற்கேற்ற மகசூல் கூடும்.

இத்தகைய சிறப்பு அம்சங்கள் கொண்ட எண்ணைய்ப் பனை சாகுபடி பற்றிய தொழில் நுட்ப ஆலோசனை வழங்க வலங்கைமான் வட்டார வேளாண்மைத்துறை -வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் வலங்கைமான் வட்டாரத்திலிருந்து சுமார் 50 விவசாயிகள் குடவாசல் வட்டாரம் ஆண்டார்பந்தி கிராமத்தில் எண்ணை பனை சாகுபடி குறித்து விவசாயிகள் கண்டுணர்வு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு எண்ணை பனை விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடலில் வலங்கைமான் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயராஜ் எண்ணை பனை சாகுபடிசெய்வது குறித்து தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்கினார். உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பிரியங்கா மற்றும் மணிமாறன் உடனிருந்தனர்.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு