×

வாழ்க்கை கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காவிட்டால் போராட்டம்

கும்பகோணம், ஜன. 28: கும்பகோணம் அடுத்த வாழ்க்கை கிராமமத்தில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்காததால் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர். மேலும் கொள்முதல் நிலையம் விரைவில் திறக்காவிட்டால் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் 3.30 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி நடந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் நாற்று நடவு செய்து தற்போது பெரும்பாலான நெற்பயிர்கள் அறுவடைக்காக காத்திருக்கின்றன. இந்நிலையில் வாழ்க்கை மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் அறுவடை பணி துவங்கியது. ஆனால் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் கடந்த 21ம் தேதி தஞ்சையில் நடந்த கூட்டத்தின்போது உணவுத்துறை அமைச்சர் காமராஜிடம் வாழ்க்கை, அலவந்திபுரம் கிராமத்தில் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டுமென தஞ்சை மாவட்ட காவிரி டெல்டா விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் காமராஜ், அறுவடை செய்யப்படும் கிராமங்களில் தேவையான கொள்முதல் நிலையம் திறக்கப்படுமென வாக்குறுதி அளித்தார். அதன்படி அமைச்சரின் பேச்சை நம்பி வாழ்க்கை, அலவந்திபுரம் கிராம விவசாயிகள், அறுவடை பணியை துவங்கினர். பின்னர் நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். ஆனால் அங்கு கொள்முதல் நிலையம் திறக்காததால் கடந்த 6 நாட்களாக கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளுடன் காத்திருக்கின்றனர். இதுகுறித்து கொள்முதல் நிலைய அதிகாரிகளிடம் கேட்டால், உரிய பதில் கூறாமல் மேலதிகாரிகளிடமிருந்து உத்தரவு வந்தவுடன் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என தெரிவிக்கின்றனர். எனவே அமைச்சர் பேச்சை நம்பி அறுவடை செய்து விட்டு விற்பனை செய்ய முடியாமல் காத்து கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனேவ மாவட்ட நிர்வாகம் உடனடியாக கொள்முதல் நிலையத்தை திறக்காவிட்டால் அப்பகுதி விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி இளங்கோவன் கூறுகையில், சம்பா, தாளடி பயிர்கள் அறுவடை தொடங்கிய நிலையில் எங்கள் கிராமத்தில் கொள்முதல் நிலையத்தை திறக்காமல் இருந்தனர். பின்னர் அமைச்சரிடம் முறையிட்டதின்பேரில் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமென உத்தரவாதம் அளித்தார். இவரது பேச்சை நம்பி நாங்கள் அறுவடை செய்துள்ளோம். ஆனால் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை. இதனால் கூலிக்கு ஆட்களை கொண்டு பாதுகாத்து வருகிறோம். இரவு நேரங்களில் கடுமையான பனிப்பொழிவால் நெல்மணிகள் நனைந்து விடுமோ என்ற பயம் உள்ளது. இதனால் செலவு செய்த தொகை கிடைக்குமா என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் இதுவரை அறுவடை செய்யப்பட்ட 1000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தின் வெளியில் கிடக்கிறது. மேலும் விவசாயிகள் அறுவடை செய்தால் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும் என பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்காக காத்திருக்கின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கொள்முதல் நிலையத்தை திறக்காவிட்டால் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார்.

Tags : paddy purchasing center ,village ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...