×

சேலம் மாவட்டத்தில் 3.76 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

சேலம், ஜன.28:  சேலம் மாவட்டத்தில்  நடந்த முகாமில் 3,76,559 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்க நாடு முழுவதும் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கடந்த 19ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்தப்பட்டது. அதில், சேலம் மாவட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வரை மொத்தம் 3,68,769 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சேலம் சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன் கூறுகையில், ‘‘சேலம் மாவட்டத்தில் 312 துணை சுகாதார நிலையங்கள், 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட மொத்தம் 2270 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மேலும், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுங்கச்சாவடிகள், திரையரங்குகள், சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் விழா நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட 77 போக்குவரத்து முகாம்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், போலியோ முகாம் நடைபெற்ற நாளென்று (19ம் தேதி) 3,48,533 குழந்தைகளுக்கு (94.5 %) போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. தொடர்ந்து, போலியோ முகாம் நடைபெற்ற நாளென்று விடுபட்ட குழந்தைகளுக்கு அடுத்த 7 நாட்களும் வீடு வீடாகச் சென்று, போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில், 2வது நாளென்று 18,346 குழந்தைகள், 3வது நாளென்று 7,160 குழந்தைகள் என அடுத்தடுத்த நாட்களும் விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இறுதியாக, 3,76,559 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு நிறைவு பெற்றது. இதில் நடமாடும் முகாம்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட நிலையில், மாவட்டத்தின் இலக்கைக் கடந்து, 102.1 சதவீதம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. கடந்த ஆண்டில் 3,46,799 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

Tags : Salem ,
× RELATED போலியோவை ஒழித்த இந்தியா; கொரோனாவை...