×

கே.பேட்டை ஊராட்சியில் காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை

குளித்தலை, ஜன. 28: கே.பேட்டை ஊராட்சியில் காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 71வது குடியரசு தினவிழாவையொட்டி குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 13 ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தாமரை செல்வி, குணாளன், ஜெகநாதன், சுமதிகோபால், பாப்பாத்திபிச்சை, செல்வி கலா, சக்திவேல், பாலதண்டாயுதம், மகேந்திரன், ரத்தினவள்ளி சண்முகம், இனுங்கூர் குமார் ஆகியோர் தலைமை வகித்து தேசிய கொடியேற்றி கிராம சபை கூட்டம் நடத்தினர். குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழுத்தலைவர் விஜயவிநாயகம் தலைமையில் தேசிய கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரவேல், மங்கையர்க்கரசி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சந்திரமோகன், சங்கீதா, முருகேசன், சத்யா, கவுரி, ராஜேஸ்வரி அறிவழகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கே.பேட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தாமரைசெல்வி தலைமையில் துணைத்தலைவர் விமலா முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
கே.பேட்டை ஊராட்சி கே.பேட்டை திம்மாச்சிபுரம், வீரவள்ளி, ஐநூற்றுமங்கலம், சீகம்பட்டி உள்ளடங்கிய கிராமபுறபகுதியில் ஊராட்சி மன்றம் மூலம் ஆழ்குழாய் அமைத்து அதில் வரும் தண்ணீரை மேல்நிலை நீர் தேக்க தொட்டியி–்ல் ஏற்றி பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வந்தனர். கே.பேட்டை ஊராட்சி என்பது வற்றாத காவிரி நதிநீர் என பெயர் பெற்ற காவிரியாறு செல்லும் ஊராட்சியாக இருந்தாலும் காவிரி குடிநீர் என்பது எட்டாக்கனியாக உள்ளது. அதனால் ஊராட்சிக்கு உட்பட்ட ஐந்நூற்றுமங்கலம் மங்கம்மா சாலை நான்கு ரோட்டு பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 60 செண்டு நிலத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் அனைத்து கிராமங்களும் பயன்பெறும் வகையில் புதிய நீர்தேக்க தொட்டி அமைத்து விரைவில் காவிரி குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். சீகம்பட்டி காலனி பகுதியில் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட 20க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அதனை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு