×

கும்மனூர் கிராமத்தில் 4ம் ஆண்டு எருதுவிடும் திருவிழா

கிருஷ்ணகிரி, ஜன.28: கும்மனூர் கிராமத்தில் நடந்த 4ம் ஆண்டு எருதுவிடும் விழாவில், வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், கும்மனூர் கிராமத்தில் 4ம் ஆண்டு எருது விடும் விழா நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய விழாவை, ஊர்கவுண்டர் வீரப்பன், மந்திரிகவுண்டர் கிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கிராமத்தில் இரண்டு பக்கமும் தடுப்பு கம்புகள் அமைத்து, ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எருதுகளை ஓட விட்டனர். இதில் குறைந்த நேரத்தில் அந்த தூரத்தை கடக்கும் எருதுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் பங்கேற்க 300க்கும் மேற்பட்ட காளைகளை, அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர். இதில் முதல் பரிசான ₹50 ஆயிரம் மதிப்பிலான தங்க நாணயத்தை, செட்டிமாரம்பட்டி நந்திதேவர் காளையும், இரண்டாம் பரிசான ₹40 ஆயிரம் மதிப்பிலான தங்க நாணயத்தை, சென்னசந்திரம் கிராமத்தை சேர்ந்த எல்லப்பன் காளையும், என மொத்தம் 52 பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவை காண கும்மனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர். விழாவின் போது, எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்க, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Tags : Annual Eruvidu Festival ,Kummanoor Village ,
× RELATED பேட்டராய சுவாமி கோயில் தேர்த்திருவிழா