×

காணாமல் போன சாமி சிலையை கண்டுபிடித்து தர கிராம மக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஜன.28: கிருஷ்ணகிரி அருகே காணாமல் போன சாமி சிலையை கண்டுபிடித்து தரக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி ஊராட்சி மலையோர கொல்லப்பட்டி கிராம மக்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கொல்லப்பட்டியில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள மலையை சமூக வனவியல் என வனத்துறை அறிவித்துள்ளது. மலையோரம் கொல்லப்பட்டி மற்றும் காலபைரவர் சாமி உள்ள மலை வரை கடந்த 1972ம் ஆண்டு முதல் 1982ம் ஆண்டு வரை, அரசு சார்பில் தொல்பொருள் ஆராய்ச்சி செய்தனர். இந்த மலையில் 300 ஆண்டுகளாக வனதுர்க்கை மற்றும் கங்கையம்மன் சாமியை குல தெய்வமாக வழிப்பட்டு வருகிறோம். தற்போது, கொல்லப்பட்டியில் உள்ள மலையில் பாறைகளை உடைக்கும் பணிகள் நடப்பதால், இங்கிருந்த நீரூற்றுகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் எங்கள் விவசாய நிலத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிணறுகளில் நீர் வறண்டு, விளை நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மலையில் கல் உடைப்பதால் மலையையொட்டியுள்ள நிலத்தில் மாஞ்செடி, சப்போட்டா, புளியம், தேக்கு, நாகமரங்கள் அனைத்தும் நீரின்றி காய்ந்து போயின. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வெடி வைப்பதால், மலையில் உள்ள காட்டு விலங்குகள் கிராமத்திற்குள் புகுந்து விடுகிறது. எங்கள் பட்டா நிலங்களில் வீடுகள் கட்ட உள்ளதால், கல்குவாரி இயங்குவதை தடை செய்து, கல் உடைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் நாங்கள் வழிபட்டு வந்த சாமி சிலை மாயமாகி உள்ளது. அதை கண்டுபிடித்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sami ,
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...