×

போச்சம்பள்ளியில் அர்ஜூனன் தபசு நிகழ்ச்சி

போச்சம்பள்ளி, ஜன.28: போச்சம்பள்ளியில் அர்ஜூனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. இதனை திரளான கிராம மக்கள் கண்டுகளித்தனர். போச்சம்பள்ளி அகரம் கிராமத்தில், அர்ஜூனன் தபசு நாடகம் நேற்று நடந்தது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி இந்த நாடகம் நடப்பது வழக்கம். முன்னதாக, கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, 37 அடி உயரமுள்ள பனை மரம் நடப்பட்டது. தொடர்ந்து அர்ஜூனன் வேடம் அணிந்த ஒருவர், பனை மரத்தின் ஒவ்வொரு படிக்கும் ஒரு பாடல் பாடியவாறு ஏறினார். தொடர்ந்து மரத்தின் உச்சியில் இருந்து, அர்ஜூனன் தவம் புரியும் நிகழ்ச்சியை நடித்து காட்டினார். அந்த சமயத்தில், பனை மரத்தை சுற்றிலும் கருடன் வலம் வந்தது. இதனை பார்த்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டனர். இதனையடுத்து, அர்ஜூனன் மரத்தின் மீது இருந்து சிறப்பு பூஜை செய்த பின்னர், வில்வ இலை, எலுமிச்சை, வாழைபழம், பொரிகடலை, பூ போன்றவற்றை வாரி வீசினார். இதனை குழந்தை இல்லாத பெண்கள் மடியேந்தி வாங்கினர். இந்த பிரசாதத்தை சாப்பிட்டால், பெண்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். அர்ஜூனன் தபசை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.

Tags : Arjunan ,Pochampally ,
× RELATED போச்சம்பள்ளியில் தென்னங்கன்று விற்பனை அமோகம்; வியாபாரிகள் மகிழ்ச்சி