×

வாங்கப்பாளையத்தில் இருந்து நாவல் நகர் வரை போதிய தெரு விளக்குகள் இல்லாததால் மக்கள் அவதி

கரூர், ஜன. 28: கரூர் வாங்கப்பாளையம் பகுதியில் இருந்து நாவல் நகர் வரை சாலையோரம் கூடுதல் தெரு விளக்கு அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் வெங்கமேடு அடுத்து வாங்கப்பாளையம் பகுதி உள்ளது. இந்த பகுதியில் இருந்து வேலூர், மண்மங்கலம், சேலம் பைபாஸ் சாலை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையின் மையப்பகுதியில் செம்மடை ரவுண்டானா வரை தடுப்புச் சுவர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாங்கப்பாளையம் பிரிவு முதல் நாவல் நகர் வரை அதிகளவு குடியிருப்புகள் இருந்தாலும் சாலையோரம் தெருவிளக்கு வசதி குறைவு காரணமாக, இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் அனைத்து தரப்பினர்களும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். ஒரு சிலர் வெளிச்சம் குறைவு காரணமாக, தடுப்புச் சுவரில் மோதி காயமடைந்தும் செல்லும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி நாவல் நகர் சாலையில் கும்மிருட்டாக உள்ள பகுதிகளில் கூடுதலாக தெரு விளக்கு வசதி கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதி சாலையை பார்வையிட்டு மக்களின் நலன் கருதி கூடுதலாக தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Velankanni ,Naval Nagar ,
× RELATED சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து