×

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் 5வது மாடியில் தவித்த கர்ப்பிணி பூனை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றினர்

திருப்பூர், ஜன.28: திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் 5வது மாடி சுற்றுச்சுவரில் சிக்கி பரிதவித்த நிறைமாத கர்ப்பிணி பூனையை, தீயணைப்புத்துறையினர் நேற்று மீட்டனர். திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் மொத்தம் 7 மாடிகள் கொண்டது. இதில், 5ம் தளத்தில் வேளாண்மைத்துறை அலுவலகம் உள்ளது. இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் கலெக்டர் அலுவலகத்துக்கு ஊழியர்கள் பணிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது 5வது மாடியின் சுற்றுச்சுவரில் கர்ப்பிணி பூனை ஒன்று கீழே இறங்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதையடுத்து, அங்கிருந்த ஊழியர்கள் சிலர், திருப்பூர் தெற்கு தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் மாடியின் பக்கவாட்டில், தாங்கள் கொண்டுவந்திருந்த வலையை வீசி அதில் இறங்க வைத்தனர். இதையடுத்து பூனையை பத்திரமாக மீட்டு சென்றனர்.  இதுகுறித்து, கலெக்டர் அலுவலக ஊழியர்கள் கூறுகையில், ‘‘நேற்றைக்கு முன் தினம் விடுமுறை என்பதால், அலுவலகத்தில் யாரும் இல்லை. பூனை எப்படி இங்கு வந்தது என யாருக்கும் தெரியவில்லை. நிறைமாத கர்ப்பிணியாக பூனை உள்ளது. பக்கவாட்டு சுவரை பிடித்து வெளியே வர முடியாத நிலையில் 300 அடி உயரத்தில் சிக்கிக்கொண்டது. இந்நிலையில் பூனை பத்திரமாக மீட்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,’’ என்றனர்.


Tags : Firefighters ,floor ,office ,Tirupur Collector ,
× RELATED ‘வெளி உலகுக்கு தெரிய வேண்டும்...