×

மாவட்டத்தில் அம்மா விளையாட்டுத் திட்டத்தின் கீழ் 228 ஊராட்சிகளில் விளையாட்டு மைதானம் அமைக்க திட்டம்

கோவை, ஜன. 28:  அம்மா விளையாட்டுத் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகள், 37 பேரூராட்சிகளில் விளையாட்டு மைதானம் அமைக்கத் திட்டமிடப்பட்டு 3 ஊராட்சிகள், 1 பேரூராட்சியில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.   பள்ளிக், கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை விளையாட்டுத் துறையில் ஊக்குவிக்கும் வகையில், அம்மா விளையாட்டு திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகளில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து அனைத்து ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் விளையாட்டு மைதனம் அமைப்பதற்குத் தேவையான இடங்களை தேர்வு செய்வதற்கு ஊராக வளர்ச்சி, பேரூராட்சித் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.அதன்படி கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகள், 37 பேரூராட்சிகளில் அம்மா விளையாட்டுத் திட்டத்தின் கீழ் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறையுடனும் மற்றும் பேரூராட்சிகளில் பேரூராட்சித் துறையுடனும் இணைந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கபடி, வாலிபால் மைதானங்கள் கட்டாயமாகவும், ஊராட்சிகள், பேரூராட்சிகளிலுள்ள விளையாட்டு வீரர்களின் தேவையைப் பொறுத்து கிரிக்கெட் அல்லது பால் பேட்மிண்டன் மைதானங்களில் ஏதாவது ஒன்றும் என மூன்று விதமான மைதானங்கள் அமைக்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் கொண்டையம்பாளையம், ஜாகீர்நாயக்கன்பாளையம் மற்றும் மலுமிச்சம்பட்டி ஆகிய 3 ஊராட்சிகளிலும், சூலூர் பேரூராட்சியிலும் விளையாட்டு மைதானங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் 21 ஊராட்சிகளில் பணிகள் முடிந்து கூடிய விரைவில் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார் கூறியதாவது: விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையுடன் இணைந்து அம்மா விளையாட்டுத் திட்டத்தின் கீழ் 228 ஊராட்சிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படுகிறது. இடம் தேர்வு, மைதானங்கள் அமைப்பது மட்டுமே ஊராக வளர்ச்சித் துறையின் பங்களிப்பு. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தலா ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் மைதானங்கள் அமைக்கப்படுகிறது. மாவட்டத்தில் 3 ஊராட்சிகள், 1 பேரூராட்சியில் விளையாட்டு மைதானங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதுடன், 21 ஊராட்சிகளில் பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளன. மற்ற ஊராட்சிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. நடப்பாண்டிற்குள் அனைத்து ஊராட்சிகளிலும் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு ரமேஷ்குமார் கூறினார்.

Tags : playground ,
× RELATED அனைத்து உள்ளாட்சி அலுவலகங்களில்...