×

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் தேர்த் திருவிழா கோலாகல கொண்டாட்டம்

திருவள்ளூர், ஜன. 28: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தை பிரமோற்சவ விழா 7ம் நாளான நேற்று காலை தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்தில், உற்சவர் வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக திருத்தேரில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் தை பிரமோற்சவ விழா கடந்த 21ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 3ம் நாளான 23ம் தேதி கருட சேவை நடைபெற்றது. 4ம் நாளான 24ம் தேதி தை அமாவாசையையொட்டி உற்சவர் வீரராகவர் தேவி பூதேவி சமேதராக ரத்தின அங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. தேரோட்டத்தையொட்டி வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக காலை 5 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார்.

காலை 7 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேளதாளம், நாதஸ்வரம் முழங்க வீரராகவ பெருமாள் எழுந்தருளிய தேர் அசைந்தாடியபடி வீதியுலா புறப்பாடு தொடங்கியது. அப்போது கூடியிருந்த பக்தர்கள், “கோவிந்தா கோவிந்தா” என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். பக்தர்கள் பலர் தேர் மீது உப்பு, மிளகு செலுத்தி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து, வடக்கு ராஜ வீதி, பஜார் தெரு, மோதிலால் தெரு வழியாக வீரராகவர் தேரில் அசைந்தாடி வரும் காட்சியை காண ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர்.

பகல் 11.30 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. அங்கிருந்து இரவு 7 மணிக்கு உற்சவர் வீரராகவ பெருமாள் கோயிலுக்குள் சென்றார். தேர் திருவிழாவை காண திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். தேர் சென்ற வீதிகளில் பக்தர்களுக்கு தொண்டு நிறுவனங்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் மோர், அன்னதானம் ஆகியவற்றை வழங்கினர். தேர் திருவிழாவை முன்னிட்டு, 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Electronic Festival ,Thiruvallur ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...