×

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணி நிரந்தரம் செய்ய கோரி ஊழியர்கள் போராட்டம்

தாம்பரம், ஜன.28: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணி நிரந்தரம் செய்யக்கோரி ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு மான்கள், புலிகள், குரங்குகள், சிங்கம், கரடி, முதலை, யானை, ஓநாய், ஒட்டகச் சிவிங்கி உள்பட பல்வேறு பறவை இனங்கள் உள்ளிட்ட உயிரினங்கள் ஏராளமானவை உள்ளன. இங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தினக்கூலி ஊழியர்கள்  200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்கம், அண்ணா உயிரியல் பூங்கா தொழிலாளர் சங்கம், அரசு பணியாளர்கள் சங்கம் என 3 சங்கங்களும் ஒன்றிணைந்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களில் முதுநிலை வரிசைப்படி பணி நிரந்தரம் செய்யவேண்டும் என நிர்வாகத்திடம், பெயர் பட்டியலுடன் கோரிக்கை மனு அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பூங்கா நிர்வாகம், காலதாமதம் செய்துவிட்டு தற்போது தன்னிச்சையாக 54 பேருக்கு மட்டும் பட்டியல் தயார் செய்து அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும், அந்த பட்டியலில் முதுநிலை இல்லாத பணியாளர்களின் பெயர் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், எந்தெந்த பணியாளர்களின் பெயர் பட்டியலில் உள்ளது என தெரிவிக்க வேண்டும் என 3 சங்கங்கள் சார்பில் பூங்கா நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், நிர்வாகம் சார்பில் எந்த பதிலும் அளிக்காததால் பூங்கா நிர்வாகத்தை கண்டித்து நேற்று காலை பூங்கா வளாகத்தின் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவக உதவியாளர் மற்றும் அடிப்படை ஊழியர்கள் சங்க தலைவர் ஜெயசீலன், செயலாளர் டேவிட், அரசு பணியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் இரணியப்பன் உள்பட தினக்கூலி ஊழியர்கள்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷமிட்டனர். மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால், சங்கங்கள் சார்பில் கூட்டம் நடத்தி, அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்த போவதாக தெரிவித்தனர்.

Tags : Wandalur Zoo ,
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...