×

மாடு முட்டியதில் பலத்த காயம் ஆம்புலன்ஸ் இல்லாததால் மானூர் சுகாதார நிலையத்தில் 3 மணி நேரம் காத்திருந்த பெண்

மானூர், ஜன. 24:   நெல்லை அருகே மானூர் தாலுகா பள்ளமடையை சேர்ந்தவர் சிவன்பெருமாள் மனைவி ஜீனத்செல்வி (24). நேற்று மதியம் ஜீனத் செல்வி, வீட்டில் வளர்த்து வரும் பசு மாட்டிற்கு தண்ணீர் காட்டுவதற்காக தொழுவத்தில் அவிழ்த்துள்ளார்.  அருகில் நின்றிருந்த முதியவர் மீது முட்டிவிடாமல் இருக்க மாட்டின் கயிற்றை வேகமாக இழுத்துள்ளார். அப்போது மாடு, ஜீனத்செல்வியை கொம்பால் முட்டி தூக்கி வீசியது. இதனால் தொடையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள், ஆட்டோவில் ஏற்றி மானூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி தரப்பட்டு மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். மேலும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மதியம் 12.30 மணியளவில் ஜீனத் செல்வி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், மாலை 3 மணி வரை ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு ஜீனத் செல்வி மயங்கினார். 3.15 மணிக்கு ஆம்புலன்ஸ் வந்த நிலையில், அவர் நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : Manoor Health Center ,
× RELATED திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் வசந்த உற்சவம்