×

போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்

மஞ்சூர், ஜன.24:நீலகிரியை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற ஓட்டுனர்கள், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தினர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் காவல் நிலையத்தின் சார்பில் எடக்காடு காந்தி மைதானத்தில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மஞ்சூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். எடக்காடு பகுதி முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். விழாவில் எஸ்.ஐ. ராஜ்குமார் பேசும்போது, வாகன ஓட்டுனர்கள் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். குடிபோதை மற்றும் செல்போன்களில் பேசியபடி வாகனங்களை இயக்கக்கூடாது. அனுமதிக்கப்பட்ட எடைக்கு மேல் வாகனங்களில் பாரங்களை ஏற்றிச் செல்லக்கூடாது. விபத்துகளை தவிர்க்க சரக்கு வாகனங்களில் ஆட்களையோ அல்லது பயணிகள் வாகனத்தில் சரக்குகளை ஏற்றி செல்வதை அறவே தவிர்க்க வேண்டும். வாகனங்களின் சான்றிதழ்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கக்கூடாது. போலீசாரின் வாகனத் தணிக்கையின்போது ஓட்டுனர் உரிமம் உள்பட அனைத்து சான்றிதழ்களையும் காண்பிக்க வேண்டும். மஞ்சூர் பஜார் பகுதியில் வாகனங்களை நிறுத்தி வைக்கும்போது அரசு பஸ்கள் உள்ளிட்ட பிற வாகனங்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது.  கடை வீதி, பள்ளிகள், கோயில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை ஒட்டி செல்லும்போது அதிவேகத்தில் வாகனங்களை இயக்கக்கூடாது. சாலை விதிகள் குறித்து அனைவரும் தெரிந்திருக்கவேண்டும். மாணவ, மாணவிகள் 18 வயது பூர்த்தியடைந்த பின்னரே வாகனங்களை இயக்கவேண்டும் என அறிவுரை வழங்கி பேசினார். இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாகமாற்ற அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

Tags :
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்