×

சிஎஸ்ஆர் திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் பெருந்துறை சிப்காட் தொழில் நிறுவனங்கள் முறைகேடு

பெருந்துறை, ஜன.24: பெருந்துறை சிப்காட்டில் நேற்று நடந்த தூய்மை வார விழாவில் எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் பேசியதாவது: கம்பெனி சட்டப்படி, 5 கோடிக்கு மேல் லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்கள், தங்கள் லாபத்தில் 2 விழுக்காடு தொகையை, சமூக சேவைக்கு செலவிட வேண்டும் என்ற சட்டம் உள்ளது. மிகச்சிறந்த இந்த சட்ட வடிவம், சமூக நற்பணிகளின் மூலம், சமூகத்தையும், கார்ப்பரேட் உள்ளிட்ச பெருநிறுவனங்களையும் இணைக்க உதவுகிறது. நகர்புற மற்றும் சிற்றூர் பகுதிகளில் நீர்த்தொட்டிகள் அமைப்பது, நீர்நிலைகளை தூர்வாருவது உள்ளிட்ட உட்கட்டமைப்பு பணிகளில் ஈடுபடுவது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி-கல்லூரிகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வகையான மேம்பாட்டு பணிகளுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டும் நிறுவனங்கள் செலவிட வேண்டும்.

ஆனால், சிஎஸ்ஆர் சட்டத்தின்கீழ் பெரும்பாலான பெருநிறுவனங்கள், சமூக மேம்பாட்டு பணிகளில், தங்களை ஈடுபடுத்தி கொள்ளாமல் முறைகேடுகளில் ஈடுபடுகிறது. இந்தப் பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் இங்கு ஒரு தொழிற்பேட்டை வரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் நிலங்களை கொடுத்துள்ளனர். தற்போது, இந்த நிலங்களின் மதிப்பு பல கோடி ரூபாய். கடந்த 10 ஆண்டுகளில் இந்த சுற்றுப்புற கிராம மக்களுக்கு இந்த சிப்காட் தொழில் நிறுவனங்கள் எந்த நன்மையும் செய்யவில்லை. மாறாக, சாயக்கழிவு நீரை திறந்து விட்டு சுற்றுச்சூழலையும், நீர்நிலைகளையும் கெடுத்து வருகின்றனர். எனவே, பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்திற்கு, 2 விழுக்காடு நிதியை செலவழிக்காத நிறுவனங்களுக்கு இந்த சுற்றுப்புற கிரமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த பட்டியல் எனது தலைமையில் தயாரித்து வழங்கப்படும். அதிகாரிகள் அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு மக்களை காக்க வேண்டும்.இவ்வாறு அவர்  பேசினார்.

Tags : chipcot industry companies ,CSR ,
× RELATED மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் அரசு பள்ளி மாணவர்களுக்கு ₹52 லட்சம் காசோலை