×

பொதுமக்களுக்கு கட்டுப்பாடு பிரபல பைக் திருடர்கள் கைது 12 வாகனங்கள் பறிமுதல்

மன்னார்குடி, ஜன.24: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில மாதங்களில் ஏராளமான இருசக்ர வாகனங்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டது. இதுகுறித்து வாகனங்களை பறி கொடுத்த பொதுமக்கள் மன்னார்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த மர்ம நபர்களை உடனே பிடிக்க மாவட்ட எஸ்பி டாக்டர் துரை உத்தரவின் பேரில் மன்னார்குடி டிஎஸ்பி கார்த்திக், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எஸ்.ஐ.சிவகுகன் ஆகியோர் தலைமையில் 6 போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப் பட்டது. இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எஸ்ஐ சிவகுகன் உள்ளிட்ட போலீசார் மதுக்கூர் சாலையில் உள்ள கோபிரளயம் என்ற இடத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டுக்கோட்டையிலிருந்து மன்னார்குடி நோக்கி ஒரு பல்சர் வண்டியில் இரண்டு வாலிபர்கள் வேகமாக வந்தனர். போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்ததை கண்ட அவர்கள் பைக்கை ரோட்டில் போட்டு விட்டு தப்பியோடினர். போலீசார் அவர்களை விரட்டி பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.

இருவரும் தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே பாவாஜி கோட்டை கிராமத்தை சேர்ந்த ராஜா (எ) முத்துராஜா (24), அதே கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (எ) சுரேஷ்குமார் (23) என்பதும் தெரியவந்தது.மேலும் மன்னார்குடி, மதுக்கூர், பட்டுக்கோட்டை போன்ற ஊர்களில் இருவரும் சேர்ந்து ஏராளமான டூவீலர்களை திருடி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து இருவரையும் தனிப்படை போலீசார் பாவாஜி கோட்டைக்கு அழைத்து சென்றனர். அங்கும் அதன் சுற்றுப் புற பகுதிகளில் இருவராலும் பல்வேறு நபர்களிடம் விற்பனை செய்யப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான 12 இருசக்கர வாகனங்களை கைப்பற்றி மன்னார்குடி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதில் 5 பைக்குகள் மன்னார்குடி யிலிருந்து திருடப்பட்டவை என அடையாளம் காணப்பட்டது. அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவுசெய்து கைது செய்னர். தொடர்ந்து இருவரையும் திருத்துறைப்பூண்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : bike thieves ,
× RELATED வாகன சோதனையில் போலீசுக்கு பயந்து...