×

சட்டமன்ற பேரவை பொதுகணக்கு குழுவினர் நிறைவு பெறாத பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பு

நாமக்கல், ஜன.24: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுகணக்கு குழுவின் தலைவர் துரைமுருகன் தலைமையில், நேற்று அக்குழுவினர் நாமக்கல்லில் ஆய்வு செய்தனர். நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற குழுவினர், அங்கு கால்நடைகளுக்கு அளிக்கப்படும் நவீன சிகிச்சை குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து, நாமக்கல் உழவர்சந்தை எதிரில் அமைக்கப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி கூடம், கொண்டிசெட்டிப்பட்டி ஏரி புனரமைப்பு பணி ஆகியவற்றை பார்வையிட்டனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் மெகராஜ்  தலைமை வகித்தார். சட்டமன்ற பேரவை பொதுகணக்கு குழு தலைவர் துரைமுருகன், கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தலைவரின் கடந்த 2013 முதல் 2017ம் ஆண்டுகளுக்கான அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து, துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

கூட்டத்துக்கு பின்னர் துரைமுருகன் நிருபர்களிடம்கூறியதாவது:
அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணம் முறையாக செலவு செய்யப்பட்டுள்ளளதா, பணிகள் முடிந்துள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. முடிக்காத பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அந்த பணிகளின் விபரம் குறித்து சட்டமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்வோம். இப்போது அதை வெளியே சொல்ல முடியாது. இந்த கூட்டத்தில் நடைபெற்ற ரகசியங்களை வெளியே சொல்ல இயலாது. மாவட்டத்தில் சில பணிகளை வேகப்படுத்த வேண்டும் என கலெக்டரிடம் அறிவுறுத்தியுள்ளேன். பல்வேறு மாவட்டங்களில் நாங்கள் ஆய்வு செய்துள்ளோம். அதன் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்வோம். இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார். கூட்டத்தில், சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன், பொது கணக்கு குழுவின் உறுப்பினர்களான எம்எல்ஏக்கள் ராஜேந்திரன் (சேலம் வடக்கு), உதயசூரியன் (சங்கராபுரம்), கீதா (கிருஷ்ணராயபுரம்), நடராஜ் (மைலாப்பூர்), பழனிவேல் தியாகராஜன் (மதுரை), பாஸ்கர் (நாமக்கல்), பாரதி (சீர்காழி), முஹம்மது அபுபக்கர் (கடையநல்லூர்), ராஜா (மன்னார்குடி), இணைச் செயலாளர் பத்மகுமார், துணை செயலாளர்கள் தேன்மொழி, ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Legislative Council ,
× RELATED இரண்டு குழந்தைகளுக்கு மேல்...