×

ஆலோசனை கூட்டம் நடத்திய பின்பே மராமத்துக்கு ராஜவாய்க்காலில் தண்ணீரை நிறுத்த வேண்டும்

பரமத்திவேலூர், ஜன.24:  கலெக்டர் தலைமையில், விவசாயிகளுடன் ஆலோசனை நடத்திய பின், ராஜவாய்க்காலில் மராமத்து பணிகள் மேற்கொள்ள, அதிகாரிகள் தண்ணீரை நிறுத்த வேண்டும் என வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமத்திவேலூர் வெற்றிலை விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டம், சங்க வளாகத்தில் கடந்த 22ம் தேதி நடைபெற்றது. சங்கத்தலைவர் நடேசன் தலைமை வகித்தார். நிறுவனர் நடராஜன், செயலாளர் வையாபுரி, பொருளாளர் ராசப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடேசன், கருப்பண்ணன், சீனிவாசன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு பரமத்திவேலூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு, விவசாயிகளுக்கு முறையான அழைப்பு விடுக்காததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆண்டுதோறும் பராமரிப்பு பணிக்காக 15 நாட்கள் ராஜவாய்க்காலில் தண்ணீர் நிறுத்த, கலெக்டர் தலைமையில் விவசாயிகள் கருத்து கேட்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தற்போது, மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், தன்னிச்சையாக சிலரின் கருத்துக்களை மட்டும் கேட்டு, 4 மாதத்திற்கு தண்ணீர் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார். எனவே, கலெக்டர் இதில் தலையிட்டு, அவரது தலைமையில் விவசாயிகளை அழைத்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி,  அதன்படி தண்ணீரை நிறுத்திவிட்டு, வாய்க்காலில் மராமத்து பணிகளை செய்ய வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : consultation meeting ,Maratham ,Rajawakkal ,
× RELATED வேதகிரீஸ்வரர் சித்திரை திருவிழா...