சேலம் லீ பஜாரில் ₹15 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

சேலம், ஜன.24: சேலம் லீ பஜார் மஞ்சள் மண்டிக்கு, நேற்று 10 டன் மஞ்சள் ஏலத்திற்கு வந்தது. இது ₹15 லட்சத்திற்கு ஏலம் போனது. தமிழகத்தில் ஈரோட்டுக்கு அடுத்தபடியாக சேலத்தில் தான் மஞ்சள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. சேலத்தில் அறுவடை செய்யும் மஞ்சளை விவசாயிகள் ஈரோடு, சேலம் லீ பஜார் மஞ்சள் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் பொங்கல் பண்டிகையையொட்டி, மஞ்சள் ஏலம் நடக்கவில்லை. நேற்று முன்தினம், வழக்கம்போல் மஞ்சள் ஏலம் நடந்தது. ஏலத்திற்கு வழக்கத்தை விட குறைந்தளவு மஞ்சள் விற்பனைக்கு வந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து சேலம் லீ பஜார் மஞ்சள் வியாபாரிகள் கூறுகையில், ‘சேலம் லீ பஜார் மஞ்சள் மண்டியில், புதன்கிழமைகளில் மஞ்சள் ஏலம் நடக்கிறது. கடந்த சில நாட்களாக இருப்பில் உள்ள மஞ்சளை தான் விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். பழைய மஞ்சளை ஏலம் எடுக்க வியாபாரிகள் தயங்குகின்றனர். சேலம் லீ பஜார் மண்டிக்கு, வழக்கமாக 50 முதல் 60 டன் மஞ்சள் ஏலத்திற்கு வரும். இது ₹40 லட்சம் முதல் ₹50 லட்சத்திற்கு ஏலம் நடக்கும். ஆனால் நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் 10 டன் மஞ்சள் தான் விற்பனைக்கு வந்தது. இது வழக்கமான வரத்தில் 20 சதவீதம் தான். இந்த மஞ்சள் ₹15 லட்சத்திற்கு ஏலம் போனது,’ என்றனர்.

Related Stories: