×

தர்மபுரி அருகே ஆள் மாறாட்ட வழக்கில் வருவாய் அதிகாரி கைது

தர்மபுரி, ஜன.24: தர்மபுரி அருகே ஆள்மாறாட்ட வழக்கில் வருவாய்த்துறை அதிகாரியான ஆர்ஐ நேற்று கைது செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டி அருகே பட்டவர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன். இவருக்கு ராமு, பாலு, கோவிந்தசாமி, கிருஷ்ணன் ஆகிய 4 மகன்கள் உள்ளனர். இதில், கோவிந்தசாமி 7ம் வகுப்பும், இவரது தம்பி கிருஷ்ணன் 10ம் வகுப்பும் படித்துள்ளனர். இருவரும் ஜம்மனஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்துள்ளனர். கிருஷ்ணன் லாரி டிரைவராக வேலை செய்தார். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது தம்பி கிருஷ்ணனின் 10ம் வகுப்பு சான்றிதழை தன்னுடையது என கூறி, ஆள்மாறாட்டம் செய்து ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தார். பின்னர் அவரது மோசடி அம்பலமானதையடுத்து பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் தலைமறைவான கோவிந்தசாமி ஆந்திராவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக அவரை அம்மாநில போலீசார் கைது செய்தனர். இதனிடையே அவர் ஆள்மாறாட்டம் செய்தது குறித்த வழக்கு, கடந்த 2016ம் ஆண்டு தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி சாட்சியம் அளித்தார். கோவிந்தசாமி, தனது தம்பி கிருஷ்ணன் பெயரில் ஆள்மாறாட்டம் செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஆள்மாறாட்டம் செய்து தப்ப முயன்ற முன்னாள் ராணுவீரர் கோவிந்தசாமி மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி உயர்நீதிமன்றம் தர்மபுரி மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும் இறந்தவர் உயிரோடு இருந்தாகவும், உயிரோடு இருந்தவர் இறந்ததாகவும் சான்றிதழ் வழங்கி ஆள்மாறாட்டத்திற்கு உதவியாக இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து முறையாக விசாரிக்காமல் இறந்ததாக சான்றிதழ் வழங்கிய அப்போதைய கிராம நிர்வாக அலுவலரும், தற்போது அரூர் தாலுகாவில் ஆர்ஐயாக பணியாற்றி வரும் ஞானசேகரனை (46) நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags : Revenue officer ,Dharmapuri ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அரசு...