×

காப்பீட்டுத் திட்டத்தில் வேண்டா, வெறுப்பாக சிகிச்சை தனியார் மருத்துவமனைகள் மீது குற்றச்சாட்டு

சிவகங்கை, ஜன.24: சிவகங்கை மாவட்டத்தில் அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற வருபவர்களை தனியார் மருத்துவமனை ஊழியர்கள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக அரசு சார்பில் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் காப்பீடு அடிப்படையில் பயனாளிகள் தனியார் மருத்துவமனையிலும், அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவுகளிலும் சிகிச்சை பெறும் வகையில் தொடங்கப்பட்டது. குடும்ப தலைவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இத்திட்டத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். மாரடைப்பு அறுவை சிகிச்சை, புற்றுநோய், எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், ஆஸ்துமா, இதய நோய்கள், கண் நோய் உள்ளிட்ட சுமார் 1,016 நோய்களுக்கான மருத்துவ சிகிச்சை, 113 நோய்களுக்கு தொடர் சிகிச்சை, 23 நோய்களுக்கான பரிசோதனை ஆகியன இத்திட்டத்தின் மூலம் செய்யப்படுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் 14 தனியார் மருத்துவமனகளிலும், மூன்று அரசு மருத்துவமனைகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட நோய்களுக்கென சிறப்பு மருத்துவமனையாக உள்ள தனியார் மருத்துவமனைகள் உள்ளதால் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளையே நாடி செல்கின்றனர். குறிப்பிட்ட நோய்க்காக ஒரு முறை அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள் உண்டு. ஆனால் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் மாதந்தோறும் தொடர்ந்து டயாலிசிஸ்(ரத்த சுத்திகரிப்பு) செய்து கொள்வது உள்ளிட்ட சில நோய் தாக்குதலால் அவதிப்படுவர்கள் தொடர்ந்து குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்கின்றனர்.

அவர்களை மருத்துவமனை நிர்வாகத்தினர், ஊழியர்கள் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது. தனியார் மருத்துவமனை ஊழியர்கள் தங்களை பொருட்டாகவே நடத்துவதில்லை என சிகிச்சைக்கு செல்பவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அவர்கள் கூறியதாவது: ஒவ்வொரு முறை சிகிச்சைக்கு செல்லும் போதும் நோயின் வேதனையைவிட மருத்துவமனை ஊழியர்கள் நடக்கும் விதம் அதிகமான வேதனையை தரும். பணம் கொடுத்து சிகிச்சை பெறுபவர்களை ஒரு மாதிரியாகவும், காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களை வேறு மாதிரியும் நடத்துகின்றனர். எங்களுக்கு சிகிச்சை அளித்து அதற்கான கட்டணத்தை மருத்துவமனை நிர்வாகம் காப்பீட்டு அட்டையின் மூலம் அரசிடம் பெற்றுக்கொள்கின்றனர். நோயாளிகளிடம் ஆறுதலாக நடப்பதிலேயே பாதி நோய் குணமாகும் என்பார்கள். ஆனால் தனியார் மருத்துவமனை ஊழியர்கள், நிர்வாகத்தினர் ஏதோ வேண்டா, வெறுப்பாக சிகிச்சை அளிப்பது போல் நடக்கின்றனர். காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறுபவர்கள் குறித்து மருத்துவத் துறை உயர் அலுவலர்கள் ஆய்வு நடத்த வேண்டும் என்றனர்.

Tags : hospitals ,
× RELATED டெல்லி அரசு மருத்துவமனைகள், மொகல்லா...