×

குடிமகன்களின் தொல்லையால் கோவிலுக்கு வரவே அச்சப்படும் பக்தர்கள்

கமுதி, ஜன.24:  சுந்தரபுரத்தில் உள்ள முனீஸ்வரர் கோவில் அருகே குடிமகன்களின் தொல்லையால், பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர். கமுதி அருகே சுந்தரபுரத்தில் உள்ள ஊரணி கரை மீது களத்தடி முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கமுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தினமும் வந்து தரிசனம் செய்கின்றனர். கோவிலுக்கு பின்புறம் முழுவதும் வயல்வெளிகள் உள்ளது. மாலை நேரங்களில், கோவிலின் வளாகத்தில் குடிமகன்கள் மது அருந்தி விட்டு பாட்டில்களை ஆங்காங்கே போட்டு செல்கின்றனர். மேலும் இப்பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இப்படி சமூக விரோத செயல்கள் நடப்பதால் மாலை நேரங்களில் பெண்கள் அச்சத்துடன் கோவிலுக்கு வருவதே இல்லை. குடும்பத்துடன் வருபவர்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு குடிமகன்கள் நடந்து கொள்வதாக புகார் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் உள்ள இரண்டு பெரிய குத்துவிளக்குகள்,  பெரியமணி ஆகியவை திருடு போய் விட்டது. இதன் மதிப்பு ரூ.20 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என்கின்றனர். இதனால் இப்பகுதியில் குடியிருப்போரும் அச்சத்தில் உள்ளனர்.

Tags : Pilgrims ,arrival ,citizens ,
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...