×

கைதி அடித்து துன்புறுத்தப்பட்ட வழக்கு ஆர்டிஓ ஆபீஸில் டிஎஸ்பி ஆஜர்

திருமங்கலம், ஜன. 24: நிலமோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டவரை அடித்து துன்புறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், ஊட்டி டிஎஸ்பியிடம் திருமங்கலம் ஆர்டிஓ விசாரணை நடத்தினார். மதுரை மாவட்டம், கள்ளிக்குடியை சேர்ந்தவர் கார்த்திகைச்செல்வன். இவர் கடந்த 2012ம் ஆண்டு நிலமோசடி வழக்கில் கள்ளிக்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீசார் தன்னை அடித்து துன்புறுத்தியதாக கார்த்திகைச்செல்வன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகைச்செல்வன் திடீரென கொலை செய்யப்பட்டார். இருப்பினும் கள்ளிக்குடி போலீசார் மீது அவர் தொடர்ந்து வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. சமீபத்தில் வழக்கை விசாரித்த ஐகோர்ட், கார்த்திகைச்செல்வன் மீது வழக்குப்பதிவு செய்த கள்ளிக்குடி போலீசாரிடம் விசாரணை நடத்தும்படி திருமங்கலம் ஆர்டிஓவிற்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய அப்போதைய திருமங்கலம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தற்போது ஊட்டியில் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார். ஐகோர்ட் உத்தரவுப்படி நேற்று திருமங்கலம் ஆர்டிஓ அலுவலகத்தில் ஊட்டி டிஎஸ்பி ரவிச்சந்திரன் விசாரணைக்கு ஆஜரானார். ஆர்டிஓ முருகேசன் அவரிடம் விசாரித்தார். அதற்கு டிஎஸ்பி, இதுதொடர்பாக அப்போது விசாரணை அதிகாரியாக இருந்த இன்ஸ்பெக்டர் சீனிவாசன், எஸ்ஐ அய்யனாருக்கு தான் தகவல் தெரியும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து அப்போது கள்ளிக்குடி இன்ஸ்பெக்டராக இருந்த சீனிவாசன், எஸ்ஐ அய்யனாரிடம் விசாரணை நடத்த ஆர்டிஓ முடிவு செய்துள்ளார். ஆர்டிஓ முருகேசன் கூறுகையில், ‘‘ஐகோர்ட் உத்தரவுப்படி நான் டிஎஸ்பி ரவிச்சந்திரனிடம் விசாரணை நடத்தினேன். அப்போதைய இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மற்றும் போலீசாரிடம் விசாரணை நடத்தி முடிவை ஐகோர்ட்டில் ஒப்படைப்பேன்’’ என தெரிவித்தார்.

Tags : DSP Azhar ,RTO Office ,
× RELATED மன்னார்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி