×

மக்கள் தொகை பெருகி வருவதால் மதுரைக்கு மெட்ரோ ரயில் சேவை சு.வெங்கடேசன் எம்பி வலியுறுத்தல்

மதுரை, ஜன. 24: மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயிலுக்கான திட்ட பணிகளை அரசு விரைவில் துவக்க வேண்டும் என்று அரசை எம்பி, வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் எம்பி வெங்கடேசன் கூறும்போது, ‘‘மதுரையில் பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப போக்குவரத்தும் வளர்ச்சி பெறும் வகையில் திட்டமிட வேண்டும். நாட்டில் மெட்ரோ ரயில் சேவை பல்வேறு நகரங்களிலும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. பத்து லட்சத்திற்குமேல் மக்கள்தொகை உள்ள நகரங்களில், மெட்ரோ ரயில் சேவை தொடங்க வேண்டும் என மத்திய அரசின் மெட்ரோ கொள்கை முடிவாகும். மதுரையில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பத்து லட்சத்தையும் தாண்டிவிட்டது. மதுரையில் பெருகிவரும் மக்கள்தொகையை கணக்கில்கொண்டு, அதற்கு ஏற்ப போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க இப்பொழுதே திட்டமிட வேண்டும். இதற்காக மதுரையிலும் மெட்ரோ ரயில் அமைப்பை உருவாக்க வேண்டும். அதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணிகளையும் உடனே தொடங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையை தமிழக முதல்வருக்கும் எம்பி வெங்கடேசன் அனுப்பி வைத்துள்ளார்.

ராஜீவ்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மதுரை சிறையில் உள்ள ரவிச்சந்திரன் 15 நாட்கள் சாதாரண விடுப்பில் விடுவிக்கப்பட்டு, அருப்புக்கோட்டையில் தங்கியுள்ளார். அவர் நேற்று மதுரையில் எம்பி வெங்கடேசனை சந்தித்து மனு கொடுத்தார். இம்மனுவில், ‘‘ராஜீவ்கொலை வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு 28 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். தமிழக அரசு நான் உள்ளிட்ட ஏழு பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வது என தீர்மானம் நிறைவேற்றி 16 மாதங்கள் ஆகிவிட்டது. மாநில அரசின் முடிவிற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் தரவில்லை. எமது நீண்டகால சிறை வாழ்க்கையை முடிவிற்குக் கொண்டு வர வேண்டும். தமிழக அமைச்சரவை, ஆளுநருக்கு இடையிலான இணக்கமற்ற போக்கை, குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, ஏழு பேரின் விடுதலைக்கு ஆவன செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை மற்ற எம்பிகளிடம் எடுத்துரைத்து, மத்திய, மாநில அரசுகளுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாட்டை தீர்க்க சட்டரீதியான எமது விடுதலைக்கு உதவிட வேண்டும்’’ என தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் எம்பி வெங்கடேசன் உறுதியளித்தார்.

Tags : Madurai ,population ,
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...