×

வீரமரசன்பேட்டை, ஆவாரம்பட்டியில் விட்டு விட்டு பெய்த மழையால் 300 ஏக்கர் நெற்பயிரை குலைநோய் தாக்கியது

திருக்காட்டுப்பள்ளி, ஜன. 24: பூதலூர் தாலுகா வீரமரசன்பேட்டை மற்றும் ஆவாரம்பட்டி கிராமங்களில் விட்டு விட்டு பெய்த மழையால் 300 ஏக்கர் அளவுக்கு அறுவடை செய்யும் பருவத்தில் பயிர்கள் சாய்ந்தும், குலைநோய் தாக்கியும் நாசமனது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனர். பூதலூர் தாலுகா வீரமரசன்பேட்டை மற்றும் ஆவாரம்பட்டி கிராமங்களில் கல்லணை கால்வாய் மூலம் பாசனம் பெற்று 6-46 எடக்கிரி குமுளி, 6-0 சயிபன் குமுளி, 6-20 மாரங்கி குமுளி, 5-85 புங்கனூர் குமுளி மற்றும் வடிகால் பாசனம் மூலம் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. 1009, 1009சப்1, ஆந்திரா பொன்னி, கோ.72, ஐஆர்20 உள்ளிட்ட ரக நெல் வகைகள் பயிரிடப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் விதை போட்டு அக்டோபரில் நடவு செய்யப்பட்டன. இதில் ஆவாரம்பட்டியில் சாகுபடி செய்யப்பட்ட 296 ஏக்கரில் 1009, 1009சப்1, கோ-72 மற்றும் ஐஆர்20 நெல் வகை 160 ஏக்கரிலும், பொன்னி 136 ஏக்கரிலும், வீரமரசன்பேட்டையில் சாகுபடி செய்யப்பட்ட 200 ஏக்கரில் 1009, 1009சப்1, கோ-72 மற்றும் ஐஆர்20 நெல் வகை 80 ஏக்கரிலும், பொன்னி 120 ஏக்கரிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு பெய்த மழையால் பயிர் பாதிக்கப்பட்டு பொன்னி நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் குலைநோய் தாக்கியுள்ளது. அறுவடை நேரத்தில் பெய்த மழையால் மற்ற வகை நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி அறுக்க முடியாத நிலையில் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விஏஓ முத்தமிழ்செல்வனிடம் கேட்டபோது, வேளாண்மை துறைக்கு தகவல் கொடுத்துள்ளோம். அவர்கள் பயிரை காப்பாற்ற வழிமுறை கூறுவர் என்றார்.

வேளாண் உதவி அலுவலர் பாண்டியன் பேசுகையில், பயிர் பாதிப்பு குறித்து பார்வையிட ஆர்ஐயுடன் செல்வதாகவும், இதுகுறித்து அறிக்கை அரசுக்கு அனுப்புவதாவும் கூறினார். அப்பகுதி விவசாயி சோம்நாத் பேசுகையில், ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையில் செலவு செய்துள்ளோம். பலன் கிடைக்கும் நேரத்தில் மழையால் குலை நோய் தாக்கியும், பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியும் இப்பகுதி விவசாயிகளை கண்ணீரில் கடலில் தவிக்கவிட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் 300 ஏக்கருக்கு மேல் பயிர் பாதிக்கப்பட்டு எங்களை கடும் துயரத்தில் ஆழ்த்தி விட்டது என்றார். எனவே சிறப்பு நிவாரணம் வழங்கி காப்பாற்ற வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் ஒரே குரலாக ஒலிக்கிறது.

Tags : Avarampatti ,
× RELATED மார்கழி அமாவாசையையொட்டி திண்டுக்கல்...