பெருமாண்டி இடுகாட்டில் குப்பைகள் தரம் பிரிக்கும் பணியை நிறுத்தகோரி மக்கள் சாலை மறியல்

கும்பகோணம், ஜன. 24: கும்பகோணம் பெருமாண்டி இடுகாட்டில் கழிவு குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் பணியை நிறுத்தகோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கும்பகோணம் பெருமாண்டியில் இடுகாடு உள்ளது. ஒன்றரை ஏக்கரில் உள்ள பெருமாண்டி இடுகாட்டில் நகராட்சி சார்பில் கழிவு குப்பைகளை கொண்டு உரம் தயாரிப்பதற்காக கட்டிடம் கட்டும் பணி துவங்கியது. இதனால் இடுகாட்டில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இடப்பற்றாகுறை ஏற்பட வாய்ப்புள்ளது.

தற்போது நாளுக்கு நாள் மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில் இடுகாட்டில் பெரிய கட்டிடத்தை கட்டினால் வருங்காலத்தில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாத நிலை உருவாக வாய்ப்புள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மனு அனுப்பியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இடுகாட்டில் கட்டிடம் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், ரமேஷ், பாலு ஆகியோர் தலைமையில் கல்லணை பூம்புகார் சாலை, பெருமாண்டி சுடுகாடு வாயிலில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் கிடைத்ததும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இன்று நகராட்சி அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்திய பின் முடிவெடுத்து எடுத்து கொள்ளலாம் என்று கூறியபின் சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Related Stories:

>