×

ஞானம்நகரிலிருந்து வல்லம் செல்லும் புறவழி சாலையில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளை தாக்கி வழிப்பறியில் ஈடுபடும் கும்பல்

தஞ்சை, ஜன. 24: தஞ்சை அருகே ஞானம் நகரிலிருந்து வல்லம் செல்லும் புறவழி சாலையில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளை தாக்கி வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளது. எனவே இந்த பகுதியில் இரவு ரோந்தை அதிகப்படுத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை அருகே ஞானம் நகரிலிருந்து வல்லம் வரை செல்லக்கூடிய புறவழி 4 வழிச்சாலையில் இரவு நேரங்களில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. இரவு நேரங்களில் அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் வருவோரை மறித்து அவர்கள் வைத்திருக்க கூடிய செல்போன், பணம் முதலியவற்றை தொடர்ந்து ஒரு போதை கும்பல் பறித்து செல்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதேபோல் லாரி அல்லது காரில் வருவோர் சாலையோரம் வாகனங்களை நிறுத்திய உடனே எங்கிருந்தோ வரும் இந்த போதை கும்பலை சேர்ந்த 3, 4 பேர் அரிவாள், கத்தியுடன் வந்து பணம், செல்போனை பறித்து கொண்டு ஓடி விடுகின்றனர். இதேபோல் நீண்ட நேரம் வாகனம் ஓட்டிய அசதியில் சாலையோரம் லாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி விட்டு ஓய்வெடுக்கும் டிரைவர்களை தாக்கி பணம், பொருட்களை கொள்ளையடித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 20ம் தேதி திருச்சியை சேர்ந்த கால் டாக்சி ஓட்டுனர் அனிஷ்குமார் என்பவர் கும்பகோணத்தில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு தனது ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். ஞானம்நகர் புறவழிச்சாலையில் இரவு 11.45 மணியளவில் காரை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது அங்கு இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 3 வாலிபர்கள் அனிஷ்குமாரை தாக்க முயன்றனர். அவர் சுதாரித்து உடனடியாக காரில் ஏறி கதவுகளை லாக் செய்து விட்டு அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டு சென்று தப்பினார். கடந்த சில மாதங்களுக்கு முன் இதேபோல் அவ்வழியாக பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு ஓய்வெடுத்த டிரைவரையும், டயர் பஞ்சரால் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் டிரைவரையும் தாக்கி அவர்களின் செல்போன் மற்றும் பணத்தை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து உடனடியாக தஞ்சை தாலுகா போலீசார் அப்பகுதியில் இரவுநேர ரோந்தை தீவிரப்படுத்துவதுடன் குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடும் அக்கும்பலை கண்டறிந்து கைது செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Tags : gang ,motorists ,highway ,Vallam ,Gnananagar ,
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...